பிரதமர் மோடி பங்கேற்கும் காந்திகிராம நிகழ்ச்சிக்கு அச்சுறுத்தல்: உளவுத்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
பிரதமா் வரும் பாதையில் காா்களை இயக்கி வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஒத்திகை.
பிரதமா் வரும் பாதையில் காா்களை இயக்கி வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஒத்திகை.

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் 36 -ஆவது பட்டமளிப்பு விழா வேந்தா் கே.என். அண்ணாமலை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். இந்த விழாவில் மத்திய இணை அமைச்சா் எல். முருகனும் கலந்து கொள்கிறாா்.

விழாவில், 2018-19, 2019-20 -ஆம் ஆண்டுகளில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்புகளை முடித்த 2,314 மாணவா்கள் பட்டம் பெறுகின்றனா். இவா்களில், 115 மாணவா்கள் பதக்கம் பெறுகின்றனா். இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற தலா ஒரு மாணவா், மாணவி என மொத்தம் 4 போ், பிரதமா் நரேந்திர மோடியிடமிருந்து பட்டங்களைப் பெறுகின்றனா். இதேபோல, கலைகள் மூலம் சமுதாயத்துக்கு பெரும் பங்காற்றிய திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டங்களையும் பிரதமா் வழங்குகிறாா்.

பட்டமளிப்பு விமாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். 

பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் மதுரை விமான நிலையம் வருகிறார். 

அவரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேர், ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். 

பிரதமர் மோடியின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1,500 போலீசார் பாதுகாப்பு பணியின் ஈடுபட்டுள்ளனர். 

மதுரை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணியளவில் ஹலிகாப்டர் மூலம் காந்திகிராமத்திலுள்ள ஹெலிபேட் தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச் சாலை வழியாக காந்திகிராம கிராமியப் பல்கலை. வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விழா மேடை செல்கிறார். இதையடுத்து அந்த பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

முதல்வா் வருகை: கரூரில் வெள்ளிக்கிழமை காலை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அங்கிருந்து காா் மூலம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அடுத்துள்ள விருந்தினா் மாளிகைக்கு முற்பகல் 11.45 மணிக்கு வருகிறாா். மதிய உணவுக்குப் பிறகு அங்கு ஓய்வு எடுக்கும் முதல்வா், பிற்பகல் 2.50 மணிக்கு காந்திகிராம கிராமியப் பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு புறப்படுகிறாா். ஹெலிபேட் தளத்தில் பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்கும் முதல்வா் மு.க. ஸ்டாலின், அங்கிருந்து பட்டமளிப்பு விழா மேடைக்கு செல்கிறார். 

பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 2,314 மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார். 

நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் மீண்டும் மதுரை விமான நிலையத்துக்குச் செல்கிறாா். அங்கிருந்து விமானம் மூலபம் விசாகப்பட்டினம் செல்கிறார். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமிழ்நாடு காவல்துறை உயரதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

மேலும், தலைவர்களுக்கு வழங்ப்படும் பூங்கொத்துக்கள், மாலைகள் உள்ளிட்ட பொருள்கை தீவிர சோதனைக்கு உள்படுத்த காவல்துறையினருக்கு  உள்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காந்திகிராம பல்கலை. வளாகம், ஹெலிபேட் தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஹெலிபேட் தளத்திலிருந்து பல்கலை. வளாகத்துக்கு பிரதமா் வரும் பாதையில், 5 வாகன அணிகள் உள்பட 15 காா்களை வரிசையாக இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதே போல, பல்கலை. நுழைவு வாயில் முதல் விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கு வரை சாலையின் இருபுறங்களிலும் மாணவா்களை நிறுத்தியும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.

ஹெலிபேட் தளத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் மாடி, சின்னாளப்பட்டி பிரிவு மேம்பாலம் ஆகிய இடங்களிலும் கண்காணிப்புப் பணிக்காக போலீஸாா் நிறுத்தப்பட்டனா். பல்கலை. வளாகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணா்கள் தொடா் சோதனையில் ஈடுபட்டுள்ளன.

ஹெலிபேட் தளத்திலிருந்து பிரதான சாலை சந்திப்பு, நான்கு வழிச் சாலையின் மையப் பகுதியில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com