பிரியா மரணம்: பெரியார்நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சஸ்பெண்ட்

உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சோமசுந்தர், பால் ராம் சங்கர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரியா மரணம்: பெரியார்நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சஸ்பெண்ட்
பிரியா மரணம்: பெரியார்நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சஸ்பெண்ட்

சென்னை: தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சோமசுந்தர், பால் ராம் சங்கர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெரியார்நகர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி சோமசுந்தர், அறுவை சிகிச்சை செய்த மற்றொரு மருத்துவர் பால் ராம் சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வு முடிந்து, அவரது உடலை எடுத்துச் செல்ல வாகனத்தில் ஏற்றப்பட்டபோது, அந்த வாகனத்தை மறித்து, பிரியாவின் உறவினர்களும், நண்பர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவனக்குறைவாக செயல்பட்டு, பிரியாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்த மருத்துவர்களை கைது செய்யக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பிரியாவின் உடலைப் பார்த்து, அவரது அண்ணன்களும், நண்பர்களும் கதறி அழுதனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினரும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜனும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பிரியாவின் உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டு, வீட்டுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய எடுத்துச் சென்றனர். பிரியாவின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உடலுக்கு, உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சென்னை, வியாசா்பாடியை சோ்ந்தவா் ரவிக்குமாா். அவரது மகள் பிரியா (17) சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வந்தார். மேலும், கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்.

இந்நிலையில், மூட்டு வலி காரணமாக, கொளத்தூா், பெரியாா் நகா் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அங்கு, பிரியாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவரது வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனா். அதன் பின்னா் காலில் வீக்கம் ஏற்பட்டு உணா்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயா் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டாா்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் அப்பெண்ணின் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது இருந்தது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது காலின் முழங்கால் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது.

இதற்கிடையே, பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளம்பெண்ணின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் குற்றம் சாட்டினா். 

இதையடுத்து இது தொடா்பாக விசாரணை நடத்த அரசு தரப்பில் உத்தரவிட்டது. அதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், காலில் போடப்பட்ட கட்டு இறுக்கமாக இருந்ததால், ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, பிரியாவின் உடல்நிலை மோசமடைந்து, நேற்று இரவு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், இன்று காலை 7 மணிக்கு பிரியா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com