ராமஜெயம் கொலை வழக்கு: மேலும் 4 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம்

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 12 பேரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ராமஜெயம் கொலை வழக்கு: மேலும் 4 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம்

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 12 பேரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார். கல்லணை செல்லும் சாலையில் பொன்னி டெல்டா பகுதியில் உடலை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள், பின்னர் சிபிசிஐடி என வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தினாலும், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் உறவினர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்த அடிப்படையில் வழக்கிற்கு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய் குழுவினர் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.

திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவக்குமார் முன்பு கடந்த 14-ம் தேதி சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். தென்கோவன் (எ) சண்முகம் சம்மதம் தெரிவிக்கவில்லை. மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை இன்று நடைபெறும் விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி 4 பேரும் இன்று (நவ17) நீதிபதி முன் ஆஜரானார்கள். விசாரணையில் அவர்கள் 4 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு, நிபந்தனையுடன் ஒப்புக் கொள்வதாக, அவர்களின் வழக்கறிஞர்கள் சம்மத மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு நீதிபதி சிவக்குமார் ஒத்திவைத்தார். அன்றைய தினம் 12 பேரும் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு அதற்கான சான்றுகளுடன் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினமே உண்மை கண்டறியும் சோதனைக்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com