விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழக்கக் காரணம் என்ன? கம்ப்ரசன் பேண்டேஜ் கதை!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, கால் மூட்டு ஜவ்வு பிளவுக்கான அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால் கடந்த 15ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்.
கால்பந்து வீராங்கனை பிரியா
கால்பந்து வீராங்கனை பிரியா

கால் மூட்டு ஜவ்வு பிளவுக்கான அறுவைச் சிகிச்சையின்போது போடப்பட்ட  இறுக்கமான கட்டு (கம்ப்ரசன் பேண்டேஜ்) அகற்றப்படாமல் விடப்பட்டதே பிரியாவின் மரணத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதுதான், மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை செய்த குழுவினர் செய்த மிக மோசமான கவனக் குறைவு. உலகில் நடக்கும் அறுவைச் சிகிச்சைகளின்போது நேரிடும் மரணங்களில் 50 சதவீதத்தைத் தடுக்க முடியும் என்றும், அறுவைச் சிகிச்சை நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டிருந்தால் பிரியா காப்பாற்றப்பட்டிருப்பார் என்கின்றன மருத்துவ வட்டார தகவல்கள்.

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, கால் மூட்டு ஜவ்வு பிளவுக்கான அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால் கடந்த 15ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்.

மூட்டு ஜவ்வு பிரச்னைக்காக, தானே நடந்துசென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனை பிரியா, ஜவ்வு பிளவுக்கான நுண்துளை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நிலையில், அதன்பிறகு மருத்துவர்களின் கவனக்குறைவால் கால் அகற்றப்பட்டு, பிறகு உயிரே பறி போயிருக்கும் சம்பவம், மருத்துவக் கவனக்குறைவின் உச்சகட்டம். அறுவைச் சிகிச்சையின்போது கடைபிடிக்க வேண்டிய மற்றும் அறுவைச் சிகிச்சைக்கான விதிமுறைகளை மாற்றியமைத்து, ஒழுங்குபடுத்தவேண்டியதன் கட்டாயத்தை உணர்த்துவதாகவே இந்த சம்பவம் உள்ளதாக மருத்துவ உலகம் கூறுகிறது.

வியாசா்பாடியைச் சோ்ந்த ரவிக்குமாரின் மகள் பிரியா, சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு உடற்கல்வி அறிவியல் படித்து வந்தாா். கால்பந்து வீராங்கனையான அவருக்கு அண்மையில் வலது மூட்டு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டது.

அவருக்கு கடந்த 7-ஆம் தேதி கொளத்தூா், பெரியாா் நகா் அரசு புறநகா் மருத்துவமனையில் மூட்டு ஜவ்வு பிளவுக்கான நுண்துளை அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை நடக்கும்போது, அந்தப் பகுதிக்கு அதிகளவில் ரத்த ஓட்டம் இருக்கக் கூடாது என்பதற்காக, தொடைப் பகுதியில் போடப்பட்ட இறுக்கமான கட்டு (கம்ப்ரசன் பேண்டேஜ்) அறுவைச் சிகிச்சை முடிந்து 24 மணி நேரத்துக்குப் பிறகும் அகற்றப்படாததால்தான், பிரியாவுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைககள் ஏற்பட்டு, கால் அகற்றப்பட்டு, மரணத்தைத் தழுவினார்.

அறுவைச் சிகிச்சை முடிந்து ஒரு நாள் முழுவதும், பிரியாவின் கால் பகுதியில், அந்த இறுக்கமான கட்டு தொடர்ந்து இருந்ததும், உரிய நேரத்தில் அகற்றப்படாததும்தான் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவக் குழுவின் மிக முக்கிய மற்றும் மோசமான மருத்துவக் கவனக்குறைவு. 

ஒரு அறுவைச் சிகிச்சை நடக்கும் இடத்திலிருந்து நோயாளி, தொடைப்பகுதியில் போடப்பட்ட இறுக்கமான கட்டு (கம்ப்ரசன் பேண்டேஜ்) அகற்றப்படாமலேயே அறுவைச் சிகிச்சை கூடத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுவதை, அங்கே பணியில் இருந்த மயக்க மருந்தியல் மருத்துவரோ அல்லது  அறுவைச் சிகிச்சைக் கூட செவிலியரோ  எப்படி கவனிக்கவில்லை என்பது கடும் அதிர்ச்சி.

அறுவைச் சிகிச்சைக் கூடத்தில் பணியாற்றும் செவிலியர்தான், நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்ய பயன்படுத்தப்பட்ட கருவிகள், பொருள்கள் அனைத்தும் நோயாளியிடமிருந்து அகற்றப்பட்டு, அறுவைச் சிகிச்சை கூடத்தில் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். இது உறுதி செய்யப்பட்ட பிறகே நோயாளி அறுவைச் சிகிச்சைக் கூடத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார். 

வழக்கமாக, ஒரு ஊசி காணாமல் போயிருந்தால் கூட, அறுவைச் சிகிச்சைக் கூடத்தின் பொறுப்பு செவிலியர், நோயாளியை அறுவைச் சிகிச்சைக் கூடத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. ஊசி என்றில்லை, அறுவைச் சிகிச்சைக்கு எடுத்து வைக்கப்பட்ட அனைத்துக் கருவிகளும் கூடத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது செவிலியரின் பொறுப்பு என்கிறார்கள் மருத்துவத் துறையினர்.

 இதுதான் அறுவைச் சிகிச்சையின் போது பின்பற்றப்படும் சரியான நடைமுறை. இந்த நடைமுறை மட்டும் பின்பற்றப்பட்டிருந்தால் கூட போதும்.. பிரியா இன்று கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பார்.

அதுபோல, இந்த அறுவைச் சிகிச்சையில், பிரியாவின் தொடையில் போடப்பட்ட இறுக்கமான கட்டு எத்தனை மணிக்குப் போடப்படுகிறது, எத்தனை மணிக்கு எடுக்கப்பட வேண்டும் என்பதை மயக்க மருந்தியல் மருத்துவரால் குறிக்கப்பட வேண்டும். உண்மையில், இது ஒரு மிக முக்கியமான நேரம், அதாவது, ஒரு மூட்டுப் பகுதி எத்தனை மணி நேரம் ரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கலாம் என்று மருத்துவத் துறை அனுமதிக்கிறதோ அந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்த நேரமாகும். இதனை, மயக்க மருந்தியல் மருத்துவர்தான் குறிப்பெடுத்து, அந்த இறுக்கமான கட்டு அகற்றப்பட்ட நேரத்தையும் கவனித்து குறித்துக் கொண்டிருக்க வேண்டும்.  ஆனால் அதுவும் நடக்கவில்லை.

அறுவைச் சிகிச்சைக் கூட செவிலியர், நோயாளி அறுவைச் சிகிச்சைக்குப் பின் எப்படி இருக்கிறார், கட்டு சரியாக போடப்பட்டிருக்கிறதா? வேறு எந்த அறுவைச் சிகிச்சை கருவிகளும் நோயாளி உடலில் இருக்கிறதா? அல்லது நோயாளியுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை முழுவதும் பரிசோதித்த பிறகுதான், அவரை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். வெளியே கொண்டு சென்றபிறகும், நோயாளி கடுமையான வலியை உணர்ந்தால், அதற்கான காரணத்தை செவிலியரும் மருத்துவரும் கவனித்திருக்க வேண்டும். ஆனால், இவை அனைத்துமே நடந்திருக்கிறது. ஆனால் அப்போதும் கூட பிரியாவின் தொடைப் பகுதியில் அந்த இறுக்கமான கட்டு இருந்துகொண்டேதான் இருந்திருக்கிறது பிரியாவின் மூட்டுப் பகுதிக்கு ரத்த ஓட்டத்தை செல்ல விடாமல் தடுத்துக் கொண்டு.

மருத்துவமனைகளில், பாதுகாப்பு வழிமுறைகளில் ஒருபோதும் தளர்வுகள் என்பதே இருக்கக் கூடாது. அதனால்தான், அறுவைச் சிகிச்சைக்கூட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் உருவாக்கி, அது உலகம் முழுவதும் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது என்கிறது மருத்துவ வட்டாரங்கள்.

சுகாதாரத் துறையில் கோலோச்சிவரும் தமிழ்நாட்டில், உலக சுகாதாரத் துறையின் இந்த வழிகாட்டுதல் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். மாவட்ட அரசுப் பொது மருத்துவமனைகளுக்கு மட்டுமல்ல, ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் கூட இது கட்டாயமாக்கப்படவேண்டும், குறைந்தபட்சம் இப்போதாவது.

அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தும் தன்னாட்சி அமைப்புகள் மற்றும் நோயாளி பாதுகாப்பு அமைப்பு, அறுவைச் சிகிச்சை நடைமுறைகள் ஆவணப்படுத்துதல் மற்றும் சிறு தொற்று பாதிப்பு உள்பட அறுவைச் சிகிச்சையின்போது நடக்கும் எதிர்மறைச் சம்பவங்கள் அனைத்துமே ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, ஏன் நடந்தது என்பதற்கான விடைகாணப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

மிகப்பெரிய அறுவைச் சிகிச்சைகளின் வெற்றி,தோல்விகள் குறித்த புள்ளிவிவரங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஆராயப்பட்டு, கடுமையான நோயல்லாத இளம் நபர்கள் மரணமடைய நேரிட்டால், அதற்கான காரணம் ஆராயப்பட்டு, அறுவைச் சிகிச்சைக் கூடத்தின் தூய்மை மற்றும் சுத்திகரிப்பு முறைகள் நிச்சயம் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதை வெட்ட வெளிச்சமாக வலியுறுத்துகிறது பிரியா மரணம்.

மருத்துவ சிகிச்சையின்போது, பாதுகாப்பு மற்றும் தரம் போன்றவை உயிர்களைக் காக்கும் வழிகாட்டுதல்கள் என்பதற்கான ஆதாரங்கள் நிச்சயம் உள்ளன. எனவே, மிக முக்கிய நடைமுறைகளில் முடிவெடுக்க கால தாமதம் ஆகக் கூடாது. தனிநபர்களின் தவறுகளைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி, அதனை பின்பற்றுவதை கட்டாயமாக்குவது என்ற நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் தரவுகளின் அடிப்படையில், மிகப்பெரிய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் உயிரிழப்பு என்பது 0.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை என்கிறது. மேலும், அறுவைச் சிகிச்சையின் போது கால் பங்கு நோயாளிகளுக்கு மோசமான பாதிப்பு ஏற்படுகிறது என்றும் தரவு கூறுகிறது.

அதேவேளையில், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நேரிடும் பாதிப்புகளில் பாதிக்கும் மேலான பாதிப்புகளை உரிய வழிகாட்டுதல்களை கண்டிப்புடன் பின்பற்றினால் நிச்சயம் தவிர்க்க முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். 

மிகச் சிறப்பான திட்டமிடல், வழிகாட்டு நெறிமுறைகளை சரியாகப் பின்பற்றுதல் போன்றவற்றால், அறுவைச் சிகிச்சையின்போது ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை கணிசமான அளவில் குறைக்க முடியும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணமே, தமிழகம் தான். தமிழகத்தில், மகப்பேறு சிகிச்சையின்போது தாய் மற்றும் சிசுவின் மரணத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக மகப்பேறு மரணங்கள் பெரிய அளவில் குறைந்ததும், தேவையான தடுப்பூசிகள் போடப்பட்டு, பல குழந்தைகளின் மரணங்கள் தடுக்கப்பட்டதுமே, மிகச் சிறந்த உதாரணங்கள்.

மகப்பேறு கால மரணங்கள் மற்றும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான மரணங்கள் பலவும் மருத்துவமனை முதல் செயலகம் வரை பல கட்ட ஆய்வுகளுக்கு உள்படுத்தப்பட்டது. இது ஒரு தனிநபரின் பிரச்னை அல்ல, இந்த மனிதத் தவறுகளை தவிர்க்கலாம், குறைக்கலாம் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு கட்டாயமாக பின்பற்றப்படும்போது.

தமிழகம், உயர்தர மற்றும் அதிசிறந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதற்கான நேரம் இது. அவ்வாறு செய்வதுதான், கால்பந்தாட்ட வீராங்கனையாக மின்ன நினைத்து, வானில் ஒரு நட்சத்திரமாக மாறிவிட்ட அந்த இளம் பெண்ணுக்கு நாம் செய்யும் இறுதிமரியாதையாக இருக்க முடியும்.

கம்ப்ரசன் பேண்டேஜ் பயன்பாடு!

நெகிழும் தன்மை கொண்ட மிக நீண்ட எலாஸ்டிக் துணிதான் கம்ப்ரசன் பேண்டேஜ். இதை எலாஸ்டிக் பேண்டேஜ் என்றும் கூறுகிறார்கள். இதில் பல வகைகள் உள்ளன. இதனை உடலின் கால் அல்லது கை பகுதிக்கு அழுத்தம் தரவும், உடலின் ஒரு பாகத்துக்கு ரத்த ஓட்டத்தைத் தடைபடுத்தவும் கூட பயன்படுத்துகிறார்கள். 

இந்த நெகிழும் தன்மை கொண்ட எலாஸ்டிக் துணியை அடிபட்ட அல்லது வலி இருக்கும் இடத்தில் அழுத்தமாகக் கட்டும்போது அங்கு தேவையான அழுத்தம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் பரவலாக்கப்பட உதவுகிறது. இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் சீக்கிரம் குணமடையவும் வீக்கம் குறையவும் உதவுகிறது.

கை, கால்களில் சுளுக்கு, தசைப் பிறழ்வு, வீக்கம், ரத்த நாளங்களில் சுற்று போன்ற பிரச்னைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கம்பரசன் பேண்டேஜை அழுத்தமாகக் கட்ட வேண்டுமே தவிர, அதிக அழுத்தமாகக் கட்டக் கூடாது. தவறாகக் கட்டியிருந்தால் உடனடியாக வீக்கம், வலி, எரிச்சல் போன்றவை ஏற்படும். இதனை அணிந்து கொண்டு உறங்கக் கூடாது. ஒவ்வொரு 3 - 4 மணி நேரத்துக்கு ஒரு முறை கழற்றி மீண்டும் கட்ட வேண்டும்.

நம்பிக்கை நட்சத்திரமான கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின்  கொடுஞ்சாவு மூலமாக கம்ப்ரஷன் பேண்ட் என்ற மருத்துவச் சொல் பரவலாக மக்களிடையே அறிமுகமாக நேர்ந்திருக்கிறது. இனியெந்தவொரு காலத்திலும் இத்தகைய துயரங்களின்வழி சொற்கள் அறிமுகமாகக் கூடாது. மருத்துவத் துறைதான் கவனமாக இருக்க வேண்டும். டாக்டர்களைத்தான் கடவுள் மாதிரி என்று மக்கள் கூறுகிறார்கள் என்பது நினைவிருந்தால் சரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com