ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏவை மேடையில் அமர வைக்க விவசாயிகள் கோரிக்கை!

விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏவை அனுமதிக்கக் கூடாது என குறைதீர் கூட்டத்தில் விவசாயி பகிரங்கமாக தெரிவித்தார்.
ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏவை மேடையில் அமர வைக்க விவசாயிகள் கோரிக்கை!

நாமக்கல்: அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டியவர் விவசாயிகளுடன் அமர்ந்து கொண்டு குறைகளை தெரிவித்துக் கொண்டிருப்பது சரியாக இருக்காது; இனிமேல் அவரை மேடையில் அமர வைக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது. பரமத்தியில் நடைபெற்ற கல்குவாரி பிரச்னை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அவர் சென்று விட்டதால், மாவட்ட வருவாய் அலுவலர் மு. மணிமேகலை கூட்டத்தை தலைமை வகித்து நடத்தினார். கடந்த மூன்று மாதங்களாக நடைபெறும் கூட்டங்களில் திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏ ஈ.ஆர். ஈஸ்வரன் விவசாயிகளுடன் அமர்ந்து குறைகளை தெரிவித்து பேசி வருகிறார். இதற்கு விவசாய சங்க பிரதிநிதிகள் தரப்பில் அதிருப்தி நிலவியது. இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் விவசாயம் மற்றும் பொது பிரச்னை சார்ந்த பல்வேறு குறைகளை தெரிவித்து வந்தார். 

அப்போது திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் மேடையில் இருந்து அதிகாரியிடம் கேள்வி கேட்க வேண்டும். மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டியவர் சட்டப்பேரவை உறுப்பினர். ஆனால் கூட்டத்தில் அமர்ந்து கொண்டு குறைகளை அவர் தெரிவிப்பது சரியானதாக இல்லை. இனிமேல் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் அவரை மேடையில் அமர வைக்க அனுமதிக்க வேண்டும்.  விவசாயிகள் சார்பில் நாங்களும் அவரிடம் இதனை வலியுறுத்துவோம் என்றார். இதனைக் கேட்ட எம்எல்ஏ ஈஸ்வரன், மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சிரித்துக் கொண்டார். தொடர்ந்து அவர் கூட்டத்தில் பேசிய போதும், திருச்செங்கோடு தொகுதி சார்ந்த நிறைவேற்றாத பிரச்னைகளை கூட்டத்தில் கடுமையாக எடுத்துரைத்தார். 

இந்த பிரச்னை குறித்து ஈஸ்வரன் எம்எல்ஏ கூறியதாவது: கூட்டத்தில் என்னை அங்கே உட்கார்; இங்கே உட்கார் என யாரும் கூறக்கூடாது. நான் கூட்டத்தில் விவசாயிகளுடன் அமர்ந்து இருக்கத்தான் விரும்புகிறேன். எங்கிருந்தும் குறைகளையோ, உத்தரவையோ தெரிவித்தாலும் அவற்றை நிறைவேற்றுவது அதிகாரிகள் தான். எனவே, இனிமேல் இது போன்று விவசாயிகள் சங்கத்தினர் பேசுவது ஏற்புடையதல்ல என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com