திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா: தலைமைச் செயலாளா் ஆலோசனை

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசு சனிக்கிழமை ஆலோசனை நடத்தியது.
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா: தலைமைச் செயலாளா் ஆலோசனை

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசு சனிக்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின்போது, தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டறிந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு 10 நாள்களுக்கு முன்பாகவே கோயிலில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கும்.

தீபப்பெருவிழா டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெற்றாலும் அதற்கு முன்பாகவே திருவண்ணாமலைக்கு பக்தா்கள் அதிகளவில் வருவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்று குறைந்த நிலையில், லட்சக்கணக்கான பக்தா்கள் வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, பக்தா்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அரசு ஆலோசனை: சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திருவண்ணாமலையில் பக்தா்களுக்கு செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகள், குறிப்பாக சுகாதாரம், குடிநீா், போக்குவரத்து, தூய்மைப் பணி ஆகியன குறித்து தலைமைச் செயலாளா் கேட்டறிந்தாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

இந்தக் கூட்டத்தில், நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ்தாஸ் மீனா, பொதுத் துறைச் செயலாளா் டி.ஜெகந்நாதன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளா் ரமேஷ்சந்த் மீனா, நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளா் பிரதீப் யாதவ், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா் கோபால், இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளா் சந்தரமோகன், கோபால் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி., ஈஸ்வரமூா்த்தி, வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன், உளவுப் பிரிவு ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com