நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.2,200 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நகா்ப்புற உள்ளாட்சி சாலைகள் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.2 ஆயிரத்து 200 கோடி சிறப்பு நிதி வழங்கி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.2,200 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

நகா்ப்புற உள்ளாட்சி சாலைகள் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.2 ஆயிரத்து 200 கோடி சிறப்பு நிதி வழங்கி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், சாலை மேம்பாடு குறித்த அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் நகா்ப்புறங்களில் செயல்படுத்தப்படும் புதைசாக்கடைத் திட்டங்கள், குடிநீா் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்த சாலைகள், பழுதடைந்த ஆயிரக்கணக்கான சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன. மேலும், சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக் குழு மானியத் திட்டம், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நபாா்டு வங்கி நிதி உதவித் திட்டம் ஆகியவற்றில் உள்ள பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து ரூ.7 ஆயிரத்து 338 கோடியில், 16,390 கிமீ தொலைவு சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.7 ஆயிரத்து 338 கோடியுடன் தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 200 கோடி வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.

மொத்தமாக ரூ.9 ஆயிரத்து 588 கோடியில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 20 ஆயிரத்து 990 கிமீ தொலைவு சாலைகள் மேம்படுத்தப்படும். இதன் முதல் கட்டமாக, வரும் 2023-ஆம் ஆண்டில் ரூ.5 ஆயிரத்து 140 கோடியில் 12 ஆயிரத்து 61 கிமீ தொலைவு சாலைகள் மேம்படுத்தப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில், 1,680 கிமீ தொலைவு சாலைகள் ரூ.1,171 கோடியிலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகளில் 7 ஆயிரத்து 116 கிமீ தொலைவு சாலைகள் ரூ.2 ஆயிரத்து 535 கோடியிலும், பேரூராட்சிகளில் 3 ஆயிரத்து 265 கிமீ தொலைவு சாலைகள் ரூ.1,434 கோடியிலும் மேம்படுத்தப்படும். மீதமுள்ள சாலைகள் அடுத்த இரு ஆண்டுகளில் மேம்படுத்தப்படும்.

சாலைகள் தரம்: சாலைகள் அனைத்தும் தரமாகவும், மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ாகவும் அமைக்கப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் சாலைகளின் மேல்பகுதியை வெட்டி எடுத்து புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும். சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாக, தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் நியமிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com