எழுத்தாளர் இமையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

கன்னட தேசிய குவெம்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளஎழுத்தாளர் இமையத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்



கன்னட தேசிய குவெம்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் இமையத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கன்னட கவிஞர் குவெம்பு பெயரிலான தேசிய விருதுக்கு யதார்த்தவாத எழுத்தின் முக்கிய படைப்பாளியாக கருதப்படும் தமிழ் எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெறும் தமிழின் முதல் எழுத்தாளரும் இவர் தான் என்ற பெருமையை இமையம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், எழுத்தாளர் இமையத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முதல்வர் ட்விட்டரில் வெளிடுள்ள வாழ்த்து செய்தியில், கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.

திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான @writerimayam நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்! என்று கூறியுள்ளார். 

தமிழ் நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க படைப்புகளைத் தந்து தடம் பதித்தவர் எழுத்தாளர் இமையம். தனது நாவல்களை கதை மாந்தர்கள் போக்குடன் அணுகி, மிகக் காத்திரமாக பதிவு செய்தவர்.

இவர் எழுத்தில் இதுவரை 11 நாவல்கள், 2 சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக,’கோவேறு கழுதைகள்’, ’செடல்’, ‘என் கதெ’, ‘செல்லாத பணம்’ ஆகிய நாவல்கள் விமர்சன ரீதியாகவும் பெரிய அங்கீகாரம் பெற்றவை.

இவர் எழுதிய பெத்தவன் நாவல் சாதி மறுப்பு திருமணம் தொடர்பான முக்கியமான உரையாடலைத் தொடங்கிவைத்தது.

வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண் குறித்து இவர் எழுதிய செல்லாத பணம், அழுத்தமான ரணங்களை பதிவு செய்திருந்தது. இப்படியாக பல முக்கிய படைப்புகளை தமிழுக்கு தந்துள்ளார்.

செல்லாத பணம் நாவலுக்காக 2020ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது இமையத்திற்கு வழங்கப்பட்டது.

இலக்கியம் தொடர்பாக பல முக்கிய விருதுகளை பெற்றுள்ள இவர், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் கனவு இல்லத் திட்டம் விருதுக்கும் தேர்வானார். இந்த நிலையில் குவேம்பு விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கன்னட எழுத்தாளர் குவெம்பு நினைவு அறக்கட்டளை சார்பாக, 2013 ஆம் அண்டு முதல் குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2022) தமிழ் மொழிக்காக இமையத்திற்கு வழங்கப்பட உள்ளது. அத்துடன் ரூ. 5 லட்சம் மற்றும் வெள்ளி பதக்கமும் வழங்கப்பட இருக்கிறது.

விருதுக்குழுவினர் ‘தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் இமையம். அவரின் பெரும்பாலான எழுத்துக்கள் பெண்ணியத்திற்கான காணிக்கையாகக் கருதலாம்’ என பாராட்டியுள்ளனர்.

இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள்
2013 – சச்சிதானந்தன் – மலையாளம்
2014 – நாமவர சிங் – ஹிந்தி
2015 – ஷியாம் மனோஹர் – மராத்தி
2016 – தேவனூரு மகாதேவா – கன்னடம்
2017 – ஹோமென் போர்கோஹைன் மற்றும் நீலமணி ஃபுகான் – அசாமி
2018 – ஜீலானி பானு மற்றும் ரத்தன் சிங் – உருது
2019 – குருபஜன் சிங் மற்றும் அஜீத் கௌர் – பஞ்சாபி
2020 – ராஜேந்திர் கிஷோர் பாண்டா – ஒடியா
2021 – சத்யவதி – தெலுங்கு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com