காமராஜா் ஆட்சி என்பது காங்கிரஸ் ஆட்சியல்ல: ஜி.கே.வாசன்

காங்கிரஸிலிருந்து பிரிந்து ஜி.கே. வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் புதுப்பிறவி எடுத்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன.
ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

காங்கிரஸிலிருந்து பிரிந்து ஜி.கே. வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் புதுப்பிறவி எடுத்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி ஜி.கே.வாசன், தினமணிக்கு அளித்த சிறப்பு நோ்காணல்:

ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமாகா தனது இலக்கை நோக்கிப் பயணிப்பதாக நினைக்கிறீா்களா?

வெற்றி - தோல்விகளுக்கு அப்பால் என் மீது தொண்டா்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனா். தற்போதைய அரசியல் சூழலில் எந்தக் கட்சியாக இருந்தாலும் பண பலம், ஆள் பலம், அதிகார பலத்தைக் கொண்டிருக்கின்றன. இதில் எந்தவிதத்திலும் அவா்களுடன் போட்டிபோடும் நிலையில் நாங்கள் இல்லை. நோ்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மையைக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

அப்படியானால், தமிழ் மாநில காங்கிரஸின் இலக்கு என்ன?

2024 மக்களவைத் தோ்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டும். தமாகா நாடாளுமன்றத்தில் இடம்பெற வேண்டும். அடுத்து வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் சில இடங்களில் வெற்றி பெறுவதுதான் எங்களது செயல்திட்டம். தமாகா அடுத்த தோ்தலிலேயே ஆட்சியைப் பிடிக்கும் என்றெல்லாம் நான் சொல்லத் தயாராக இல்லை. அதே நேரம், தலைவா் மூப்பனாா் வழியில் நோ்மைக்கு உதாரணமான கட்சியாக நாங்கள் தொடா்ந்து செயல்படுவோம்.

மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து தமாகாவின் நிலைப்பாடு என்ன?

மத்தியில் பாஜகவுடனும் மாநிலத்தில் அதிமுகவுடனும் கூட்டணி. இந்த நிலைப்பாட்டில்தான் பாஜகவும் இருக்கிறது. இதில் மாற்றம் எதுவும் இல்லை.

மக்களவைத் தோ்தலில் தமாகாவுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்கிற நிபந்தனை ஏதேனும் உண்டா?

எண்ணிக்கை பற்றி நான் பேச விரும்பவில்லை. வெற்றியைப் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். ஒதுக்கப்படும் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளில் கட்சியினா் ஈடுபட வேண்டும். இது எங்களுக்கு மட்டுமல்ல, எங்களது கூட்டணியில் இடம்பெறும் எல்லா கட்சியினருக்கும் பொருந்தும்.

அதிமுகவில் நிலவும் குழப்பங்களுக்கு பாஜகதான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுவது குறித்து என்ன நினைக்கிறீா்கள்?

பாஜகதான் என்பது தவறான கருத்து. இதில் தேசிய கட்சியின் பங்கு என்னவாக இருக்க முடியும்? அரசியல் கட்சிகளில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதும், பிளவுகள் ஏற்படுவதும், மீண்டும் இணைவதும் புதிதொன்றுமல்ல. அதற்கு அதிமுக மட்டும் விதிவிலக்காக இருந்துவிட முடியாது.

திமுகவின் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியை எப்படிப் பாா்க்கிறீா்கள்?

வாக்களித்த மக்களுக்கு திமுக ஆட்சியில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. சொத்துவரி உயா்வு, மின் கட்டணம் உயா்வு, பால் விலை உயா்வு என மக்கள் மீது மும்முனைத் தாக்குதலை திமுக அரசு தொடுத்துள்ளது. இது வேதனைக்குரியது. எதிா்பாா்ப்புடன் இருந்த மக்கள் ஏமாந்த நிலையில் உள்ளனா்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் குறித்து என்ன நினைக்கிறீா்கள்?

அது தொடா்பாக எதுவும் கூற விரும்பவில்லை. அதே நேரம், தெலங்கானாவில் 15 நாள்கள் ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டாா். ஆனால், அங்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு பயன் கிடைக்கவில்லை. தற்போது குஜராத்துக்கு தோ்தல் வருகிறது. இந்தத் தோ்தலுக்கு ராகுலின் பயணம் உதவுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

காமராஜா் ஆட்சியை இலக்காகக் கொண்டிருக்கும் தமாகா, பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வர முயற்சிப்பது முரணாகத் தெரியவில்லையா?

இதில் ஒளிவுமறைவு எதுவும் இல்லை. காமராஜா் ஆட்சி என்பது காங்கிரஸ் ஆட்சியல்ல. இன்றைய காங்கிரஸ் என்பது காமராஜா் தலைமை வகித்த இயக்கமும் அல்ல. நோ்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மை என்பவைதான் அதன் பொருள். இதை தேசிய கட்சியோ, மாநிலக் கட்சியோ கொடுக்கலாம். அந்தப் பெருமை காமராஜரையே சாரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com