
திருவாரூரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள், அமெரிக்காவில் இருந்து மீட்பதற்கு அரசிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆவணங்களை அளித்துள்ளது.
திருவாரூா் மாவட்டம் ஆலத்தூா் வேணுகோபால சுவாமி கோயிலில் இருந்த 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஷ்ணு, ஸ்ரீதேவி,பூதேவி உலோகச் சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனதாகவும், திருடுபோன 3 சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்து அறநிலையத்துறையின் ஆய்வாளா் எஸ்.நாகராஜன், விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
பின்னா் இந்த வழக்கின் விசாரணை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு இது தொடா்பாக நடத்திய விசராணையில், 3 சிலைகளும் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘லாக்மா’ என்ற அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், அந்தக் கோயிலில் இருந்த பிற சிலைகள் மீதும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மீதமிருந்த யோக நரசிம்மா், விநாயகா், நடனமாடும் கிருஷ்ணா்,நடனமாடும் சம்பந்தா்,சோமாஸ்கந்தா், நின்றகோலத்தில் இருக்கும் விஷ்ணு ஆகிய 6 சிலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஆவணங்கள் அளிப்பு: இச் சோதனையில் அந்த 6 சிலைகளும் போலியான என்பதும், உண்மையான சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பே திருடபட்டிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக 50 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த அந்த சிலைகள் குறித்த புகைப்படம் மூலம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் துப்பு துலக்கினா்.
இதில், திருடப்பட்ட யோக நரசிம்மா் சிலையும்,விநாயகா் சிலையும் அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டி, மிசெளரியில் உள்ள ‘நெல்சன்-அட்கின்ஸ்’ ஆகிய அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த இரு சிலைகளையும் மீட்பதற்குரிய ஆவணங்களை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, அரசிடம் அளித்துள்ளது. இந்த ஆவணங்கள் மூலம் யுனெஸ்கோ ஒப்பந்ததின் கீழ் அந்த சிலைகளை மீட்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோல பிற சிலைகளையும் கண்டறிந்து, அவற்றையும் மீட்பதற்குரிய நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது.