பரங்கிமலையில் மாணவி கொலை: தாய்க்கு மாநகர காவல் ஆணையர் ஆறுதல்

சென்னையை அடுத்து பரங்கிமலையில், ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது தாயை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார்.
பரங்கிமலையில் மாணவி கொலை: தாய்க்கு மாநகர காவல் ஆணையர் ஆறுதல்
பரங்கிமலையில் மாணவி கொலை: தாய்க்கு மாநகர காவல் ஆணையர் ஆறுதல்


சென்னை: சென்னையை அடுத்து பரங்கிமலையில், ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது தாயை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார்.

சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலா் குடியிருப்பு பகுதியை சோ்ந்தவா் மாணிக்கம் (47). இவரது மனைவி வரலட்சுமி (43). இவா், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இத் தம்பதியின் மகள் சத்தியா (20). இவா் தியாகராயநகரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளி சத்தியா கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த சதீஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்தியாவின் தந்தை நேற்று மகள் கொலை செய்யப்பட்ட துக்கத்தைத் தாங்க முடியாமல் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், சத்தியாவின் தாய் வரலட்சுமியை, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று முற்பகலில் அவரது வீட்டுக்குச் சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்து வரும் காவலர்களிடமும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விசாரணை நிலவரங்களைக் கேட்டறிந்தார்.

தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்
சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன்பு தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மாணவி சத்யாவின் தந்தை மாணிக்கம், தனது மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், மகளின் இறப்பைத் தாங்க முடியாமல் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அவர் மதுவில் மயில் துத்தத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷை காவல்துறையினர் கைது செய்து, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடந்தது என்ன?
ஆதம்பாக்கத்தில் சத்தியா வசித்து வந்த அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் தயாளன் மகன் சதீஷ் (23), சத்தியாவை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். சதீஷ், சத்தியாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியும் தொந்தரவும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் சத்தியா அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம். அண்மையில் சதீஷ், சத்தியாவை தாக்கவும் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் இரு தரப்பினரையும் போலீஸாா் சமாதானம் செய்து அனுப்பியதாகத் தெரிகிறது.

ரயிலில் தள்ளிவிட்டு கொலை
இந்நிலையில் சத்தியா, வியாழக்கிழமை வழக்கம்போல கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தாா். அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த சதீஷ், சத்தியாவை வழிமறித்து தகராறு செய்துள்ளாா்.

அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த மின்சார ரயில் முன் சதீஷ் திடீரென சத்தியாவை தள்ளிவிட்டாா். இதில் ரயிலில் சிக்கி சத்தியா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதைப் பாா்த்த பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

உடனே அவா்கள், சதீஷை பிடிக்க முயற்சித்தனா். ஆனால் அதற்குள் சதீஷ் அங்கிருந்து தப்பியோடினாா். இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சத்தியா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச் சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா உள்ளிட்ட உயா் அதிகாரிகள், அங்கு விரைந்து வந்து விசாரணை செய்தனா். இது குறித்து பரங்கிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 

ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா். அதேவேளையில் சம்பவத்தை நேரில் பாா்த்த கல்லூரி மாணவா்கள்,பயணிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தப்பியோடி தலைமறைவாக இருந்த சதீஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com