புதிய விதிகள் அமல்! நெல்லையில் வாகன ஓட்டிகளிடம் 10 மடங்கு அபராதம்!  மக்கள் அதிர்ச்சி!

சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் திடீரென பத்து மடங்கு அபராதம் வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். 
புதிய விதிகள் அமல்! நெல்லையில் வாகன ஓட்டிகளிடம் 10 மடங்கு அபராதம்!  மக்கள் அதிர்ச்சி!


நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தால் ஏற்பட்ட செலவினத்தை தாக்கு பிடிக்க முடியாத ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பண்டிகை முடிந்த கையோடு சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் திடீரென பத்து மடங்கு அபராதம் வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். 

நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படும் நிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டது.

இந்த  நிலையில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி அதற்கான அரசாணையும் சமீபத்தில் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறுவோர் மீது புதிய சட்டத்தின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட அபராத தொகை வசூலித்து இதற்கேற்றாற்போல அபராதம் வசூலிக்கும் கையடக்க கருவியில் உயர்த்தப்பட்ட கட்டணம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து  வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகில் மாநகர போக்குவரத்து போலீசார் புதன்கிழமை திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் செல்வது, அதிக வேக பயணம் உள்பட சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து புதிய சட்டத்தின்படி 10 மடங்கு உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கப்பட்டது. 

தலைக்கவசம் அணியாத வாகன ஒட்டிகளிடம் ரூ.100 பதில் ரூ.1000, ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகளிடம் ரூ.500 ரூபாய்க்கு பதில் ரூ.5,000, அதேபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி இரண்டாவது முறையாக சிக்கும் நபர்களிடம் ரூ.15,000, வாகன காப்பீடு இல்லாத வாகன ஓட்டிகளிடம் ரூ.500-க்கு பதில் ரூ.5,000, அதிவேகமாக ஓட்டும் கனரக வாகன ஓட்டிகளிடம் ரூ.4,000 என பத்து மடங்கு உயர்த்தப்பட்ட புதிய அபாரத தொகை வசூலிக்கப்பட்டது .

ஏற்கனவே, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தால் ஏற்பட்ட அதிக செலவினத்தை தாக்கு பிடிக்க முடியாத ஏழை எளிய மற்றும் நடுத்தர பொதுமக்கள் பண்டிகை முடிந்த கையோடு திடீரென பத்து மடங்கு அபராதம் வசூலித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலை விபத்துக்களை தடுக்க இதுபோன்ற விதிமுறைகளை கடுமையாக்குவது தவறில்லை என்றாலும், அதற்கேற்ப சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் இதுபோன்று பத்து மடங்கு அபராத தொகை வசூலிப்பது எப்படி நியாயம் என்று புலம்பியபடி வாகன ஓட்டிகள் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com