கேரளத்தில் பறவைக் காய்ச்சல்: நாமக்கல் கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல் மண்டல கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினியால் வாகனங்களில் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளத்தில் பறவைக் காய்ச்சல்: நாமக்கல் கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

நாமக்கல்: கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல் மண்டல கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினியால் வாகனங்களில் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு லட்சக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டன. அதன் எதிரொலியாக, நாடு முழுவதும் கோழிப் பண்ணைத் தொழில் பாதிப்படைந்தது. பொதுமக்கள் முட்டை, கோழி இறைச்சி வாங்குவதை தவிர்த்து வந்தனர். 

மேலும், வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதும் தடைபட்டது. அதன்பிறகு பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லாததால் கோழிப் பண்ணைத் தொழில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், கேரளத்தில் கடந்த சில ஆண்டுகளாக வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள கால்நடைத்துறை உத்தரவின்பேரில் நோய் பாதிப்புக்குள்ளான வாத்துகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் கேரள மாநிலத்தில் மூன்று முறை பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில், ஆலப்புழா மாவட்டம் வாழுநத்தம் என்ற பகுதியில் 1500 வாத்துகள் பறவைக் காய்ச்சலால் இறக்க நேரிட்டது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஹரிப்பாட் நகராட்சி மூலம் அங்குள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகளை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கேரள கால்நடைத்துறை அதிகாரிகள் இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்து  போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி உள்ளனர். 

அதில் ஹெச் 1 என் 1 வைரஸ் தொற்று வாத்துகளைப் பாதித்திருப்பது தெரியவந்தது. தற்போது வாழுநத்தம் பகுதியை மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப் பண்ணைகளில் நாள்தோறும் 4.50 லட்சம் முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் பெரும்பாலும் கேரளத்திற்கும், வட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், வயது முதிர்ந்த முட்டைக் கோழிகளும் ஏராளமான கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை, இறைச்சிக்கான கோழிகள் அனுப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. 

இதனால் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்களது பண்ணைகளில் கிருமி நாசினி கொண்டு கோழிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும், வாகனங்கள் மற்றும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களையும் சுகாதாரமாக வைத்திருப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். அனைத்து கோழிப் பண்ணைகளிலும் வெளியாள்கள் உள்ளே நுழையாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு பறவைகள் உலா வருவதை தடுக்கும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதையும் செய்து வருகின்றனர்.  

இது குறித்து நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் கூறியதாவது: கேரளத்தில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்படுவது வழக்கமானது தான். கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோல் வாத்துகள் பாதிக்கப்பட்டு இறந்ததாக தெரியவந்தது. இதனால் கோழிப் பண்ணைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. 

நாங்கள் எப்போதும் பண்ணைகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துள்ளோம். வாகனங்கள் வெளியே செல்லும்போதும், பண்ணைகளுக்குள் நுழையும்போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பிறகே அனுமதிக்கிறோம். எந்த மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலும், நாமக்கல் கோழிப் பண்ணைகள் தான் பாதிப்புக்குள்ளாகின்றன. 

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. வாத்துகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும், கோழிகளுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com