ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்க: கே.பாலகிருஷ்ணன்

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை, கார் வெடிப்பு சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவின் முயற்சிகளுக்கு ஆளுநர் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது.

கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, துரிதமாக விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை குற்றத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்ததுடன், 75 கிலோ வெடி மருந்துகளையும் கைப்பற்றியது. இந்த வழக்கில் சர்வதேச தொடர்புகள் இருக்கலாம் என்ற நோக்கில் இவ்வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சம்பவத்தை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் குழப்பத்தை விளைவிக்கும் விதமாக வெளிப்படையான முயற்சிகளை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. காவல்துறை விசாரணைக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடக்கத்திலிருந்தே ஊடகங்களில் பேசி வந்தார். காவல்துறையின் உளவு பிரிவில் உள்ளோரை மத அடிப்படையில் பிரித்து, குதர்க்கமாக பேசி, குறுகிய அரசியல் நோக்கத்துடனான அவரின் பேச்சுக்கள் எல்லை மீறின.

இதனைத் தொடர்ந்து கோவை மாநகரில், முழு அடைப்புப் போராட்டம் நடத்துவோம் என்றும்  பாஜக அறிவித்தது. தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முழு அடைப்புப்  போராட்டம் நடத்துவதற்கு ஆதரவாக ஊடகங்களில் பேசினார்.

ஆனால், பாஜகவின் முழு அடைப்புப் போராட்ட அறிவிப்பிற்கு பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உடனே, தாங்கள் முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக தெரிவித்து.

இப்போது, அடுத்தகட்ட சதிராட்டமாக, ஆளுநர் ரவியை களமிறக்கிவிட்டுள்ளார்கள். கோவையில் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், காவல்துறையின் துரிதமான செயல்பாட்டை பாராட்டிவிட்டு, என்.ஐ.ஏ விசாரணை தாமதப்படுத்தப்பட்டதாகவும், அதனால் ஆதாரங்கள் அழிய வாய்ப்புள்ளது என்றும் கற்பனைச் சரடுகளை அள்ளி விட்டுள்ளார். மாநில அரசாங்கத்திற்கு உள்நோக்கம் கற்பிக்க முயற்சி செய்திருக்கிறார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை வரம்பில் உள்ளவர்களே. எனவே, முன்கூட்டியே இப்படியொரு அசம்பாவிதத்தை கணித்து தடுக்க தவறியது என்.ஐ.ஏ தான். ஒருவேளை காவல்துறையோடு இணைந்து தானும் விசாரணையை நடத்த வேண்டும் என என்.ஐ.ஏ விரும்பினால் அதற்கான அதிகாரமும் அவர்களுக்கு உள்ளது.
உண்மை இப்படியிருக்க ஆளுநர் விமர்சிப்பதாக இருந்தால் என்.ஐ.ஏ மீதுதான் தன் விமர்சனத்தை திருப்பியிருக்க வேண்டும்.  ஒருவேளை ஆளுநர் கதைவிட்டது போல வழக்கின் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தால் அதில் மத்திய அரசு தான் குற்றவாளியாக இருக்க முடியும்.

இந்திய அரசாங்கம் என்பதே மாநிலங்களையும் உள்ளடக்கிய கூட்டாட்சிதான். எல்லை பாதுகாப்பு தவிர அனைத்து பணிகளிலும் மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படும் விதமாகவே அரசமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசமைப்பினை உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் ஒற்றை ஆட்சி நிலைப்பாட்டில் நின்றுகொண்டு, பொறுப்பற்ற முறையில் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் பாஜகவின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையான கண்டனத்திற்குரியவை. அதற்கு உடந்தையாக ஆளுநர் பதவி பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே,   ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் வற்புறுத்துகிறோம்.

கோவை மக்களின் பாதுகாப்பையும், சமூக அமைதியையும் நிலைநாட்டுவதே தற்போதைய தலையாய கடமையாகும். தீவிரவாத, பிளவுவாத சக்திகளை முறியடித்திட வேண்டும். கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தி, குற்றம் இழைத்தோரை தண்டிக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com