10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு மறுத்த நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமூக நீதி வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும் 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுப்பணித்துறையில் 1996-98 முதல் 24-26 ஆண்டுகளாக தற்காலிக மஸ்தூர் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 6 பேர் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களின் மனுவை ஒற்றை நீதிபதி தள்ளுபடி செய்து விட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு,  மனுதாரர்கள் 6 பேரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றியிருப்பதால் அவர்கள் எந்த தேதியில் பத்தாண்டுகளை நிறைவு செய்தார்களோ, அந்த நாளில் இருந்து அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாளில் இருந்து அதற்கான அனைத்து பயன்களையும் வழங்கவும் ஆணையிட்டுள்ளது.

28.02.2006 அன்று வெளியிடப்பட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் அரசாணை எண் 22-இன் படி 01.01.2006 அன்று பத்தாண்டுகள் தற்காலிக பணி முடித்திருந்தவர்களுக்கு மட்டும் தான் பணி நிரந்தரம் வழங்க முடியும்; மனுதாரர்கள் 6 பேரும் அந்த தேதியில் பத்தாண்டு பணியை நிறைவு செய்யவில்லை என்பதால் அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க முடியாது என்று தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட நீதிபதிகள், 6 பணியாளர்களும் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றியுள்ளனர் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கியுள்ளனர். இது மனிதநேயமிக்க தீர்ப்பாகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டதோ, அதை அடிப்படையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான் பாமக நிலைப்பாடு ஆகும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் உயர்நீதிமன்றம் கருணையுடன் நடந்து கொள்ளும் நிலையில், அது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணைகள் கடுமையானவையாகவும், கருணையற்றவையாகவும் உள்ளன என்பதே உண்மையாகும்.

 2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான முதல் அரசாணை 2006-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 27.06.2013-ஆம் நாளில் அரசாணை எண் 74-ம், 28.11.2020-ஆம் நாளில் அரசாணை எண் 131-ம் பிறப்பிக்கப்பட்டன. கடைசி இரு அரசாணைகளும் நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு கடுமையானவை. 2006-ஆம் ஆண்டுக்கு முன்பாக பத்தாண்டு தற்காலிக பணியை நிறைவு செய்திருக்க வேண்டும்; அவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியிடம் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியாக இருக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் சாத்தியமற்றவை.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசாணை எண் 131-இன் படி, 1995 திசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பாக, ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களில் தற்காலிக ஊழியராக சேர்ந்தவர்களை மட்டும் தான் பணி நிரந்தரம் செய்ய முடியும். இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழக அரசுத் துறைகளில் தற்போது பணியாற்றி வரும் தற்காலிகப் பணியாளர்களில் ஒருவரைக் கூட பணி நிரந்தரம் செய்ய முடியாது.

2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு சுமார் ஒரு லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினர் பத்தாண்டுகளை நிறைவு செய்து விட்டனர். அவர்களில் சுமார் 70% பணியாளர்கள் 20 ஆண்டுகளை கடந்து விட்டனர். அவர்களுக்கு பணி நிரந்தரம், அதன் மூலம் சமூக நீதியும் வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், அதற்கேற்றவாறு விதிகளை வகுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சாத்தியமற்ற விதிகளை வகுத்தால், அதனால் யாருக்கும் பயனில்லை.

தமிழ்நாட்டில் தற்போது தற்காலிக ஊழியர்கள் பணியாற்றும் பணியிடங்களுக்கு இணையான நிரந்தர பணியிடங்கள் இல்லை. அதனால், அரசாணை எண் 131-இன்படி அவர்கள் தற்காலிக பணியாளர்களாகவே நீடிக்க முடியும்; பணி நிரந்தரம் வழங்க முடியாது. அதனால் தற்காலிக ஊழியராக சேர்ந்த ஒருவர் 35 ஆண்டுகள் பணியாற்றினாலும் அதே நிலையில் தான் ஓய்வு பெற வேண்டும்; அவருக்கு ஓய்வுக் கால பயன்கள் உள்ளிட்ட எந்த உரிமையும் கிடைக்காது. இதைவிட மோசமான சமூக அநீதி இருக்க முடியாது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி இந்த சமூக அநீதியை களைய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பு ஆகும்.

எனவே, அரசாணை எண் 131-இல் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி, சென்னை உயர்நீதிமன்றம் காட்டிய கருணையுடன், பத்தாண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும், அவர்கள் எந்த தேதியில் பத்தாண்டுகளை நிறைவு செய்தார்களோ, அந்த நாளில் இருந்து அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் தற்காலிக நியமனங்களை தவிர்த்து, அனைத்து பணியிடங்களுக்கும் நிரந்தர பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com