சோழர்களின் பாசன திட்டங்களை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சோழர்களின் பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைதுள்ளார்.
சோழர்களின் பாசன திட்டங்களை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் 

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சோழர்களின் பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைதுள்ளார்.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமை தாங்கினார். சேத்தியாத்தோப்பு கார்த்திக் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட வன்னியர் சங்க தலைவர் குருங்குடி பாஸ்கர், மாவட்ட துணை செயலாளர் எம் டி கலைக்குமார், ஒன்றிய செயலாளர். ராஜேஷ், வழக்குறைஞர் கார்த்திகேயன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சோழர்களின் பாசன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, அரியலூர் மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி நடைப்பயணத்தை தொடங்கி காட்டுமன்னார்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு முடித்தார்.

அப்போது நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் இந்த இரண்டு நாள்கள் அரியலூர், கடலூர் மாவட்டங்களில் சோழர் மன்னர்கள் விட்டுச் சென்ற பாசன திட்டங்களை  செயல்படுத்த வலியுறுத்தி  நடைப் பயணம் மேற்கொண்டேன். நான் இதற்கு முன்னர் தமிழகத்தில் உள்ள காவிரி மற்றும் பாலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளின் பாசனத்தை மேம்படுத்த பல்வேறு நடைப் பயணங்களை மேற்கொண்டேன்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு காவிரி ஆற்றின் மீது எனக்கு மிகுந்த பற்று உண்டு. தாய்க்குப் பிறகு காவிரி தாயை வணங்குகிறேன். பிலிக்கொண்டில் இருந்து பூம்புகார் வரை மூன்று நாள்கள் காவிரியை காப்போம் என்றுக் கூறி நடைப்பயணம் மேற்கொண்டேன். இதேபோன்று தமிழகத்தில் பல்வேறு நீர் பாசன முறைகளை சரி செய்வதற்கு நடைப்பயணங்களை மேற்கொண்டு உள்ளேன். நீர்நிலை பாதுகாக்க வேண்டும் என்று நான் துடித்துக் கொண்டிருக்கிறேன்.

நாம் ஆட்சிக்கு வந்தால் இரண்டு ஆண்டுகளில்  இந்த நீர் நிலைகளை சீரமைப்போம் என உறுதி கூறுகிறேன். காலநிலை மாற்றத்தால் சீனா, ஐரோப்பாவில் வறட்சி, அமெரிக்காவில் குடிநீர் பற்றாக்குறை, பாகிஸ்தானில் கடும் மழையினால் ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பு என பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகிறது. 

அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி, சாதி, பாகுபாடு இன்றி சோழர்கள் விட்டுச் சென்ற இந்த  நீர்ப்பாசன முறைகளை பாதுகாப்பாக மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சோழ மன்னர்களால் அமைக்கப்பட்ட வீராணம் ஏரியில் தூர் வாருவதற்காக இரண்டு கட்சிகளும், ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளது  ஆனால் எவ்வித  பயனும் இல்லை. 

அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்கும் உரிமை என்ற வித்தியாசமான பயணமே பாமகவின் திட்டமாகும். விவசாயிகளுக்கு இலவசம் கொடுக்க வேண்டாம். நெல்  குவிண்டால்  ஒன்றுக்கு ரூ.3000 வழங்க வேண்டும். தமிழக முதல்வரை சந்தித்து சோழர்  கால பாசனத் திட்டங்களை தொடர வேண்டும். வீராணம்  ஏரியை பாதுகாக்க வேண்டும். 

காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆறு வரை 70 தடுப்பணைகளைக் கட்டி 70 டிஎம்சி தண்ணீர்  சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துவேன். 

இந்த திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்துவோம் என பேசினார். மேலும்  நமது பாசன முறைகளை சீர் செய்த ஆங்கிலேய பொறியாளர் சர் ஆதர் காட்டன் என்பவர்க்கு  மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்த கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர்  பு.தா அருள்மொழி, வழக்குறைஞர் பாலு, ஆலயமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தேவதாஸ் படையாண்டவர் , இரு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் அன்பு.சோழன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com