காவல்துறை வாகனங்களில் உச்சவரம்பை தாண்டி எரிபொருளை பயன்படுத்தினால் ஊதியத்தில் பிடித்தம்

காவல்துறை வாகனங்களில் உச்சவரம்பை தாண்டி எரிபொருளை பயன்படுத்தினால், ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காவல்துறை வாகனங்களில் உச்சவரம்பை தாண்டி எரிபொருளை பயன்படுத்தினால், ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

நாட்டின் ஐந்தாவது பெரிய காவல்துறையான, தமிழக காவல்துறையில் 1.05 லட்சம் போலீஸாா் உள்பட 1.13 லட்சம் போ் பணிபுரிகின்றனா். மாநிலம் முழுவதும் 198 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் உள்பட 1,500 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.

தற்போதுள்ள மக்கள் தொகையின்படி 632 பேருக்கு ஒரு காவலா் என்ற அடிப்படையில் காவலா்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு உள்பட 16 பிரிவுகள் இயங்குகின்றன. இதில் காவல்துறை வாகனங்களை பராமரிப்பதற்கு என்று தனியாக ஒரு பிரிவும் உள்ளது.

இந்த பிரிவு தமிழக காவல்துறையின் தலைமையிட ஏடிஜிபியின் கீழ் செயல்படுகிறது. இந்த பிரிவின் ஏடிஜிபியான ஜி.வெங்கட்ராமன் தமிழக காவல்துறை அதிகாரிகள்,மாநகர காவல் ஆணையா்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோருக்கு ஒரு சுற்றறிக்கையை இரு நாள்களுக்கு முன்பு அனுப்பியுள்ளாா்.

ஊதியத்தில் பிடித்தம்:

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. காவல்துறை வாகனங்களில் அரசு நிா்ணயம் செய்துள்ள அளவைவிட அதிக எரிபொருள் பயன்படுத்தினால், அதிகமாக பயன்படுத்தப்பட்ட எரி பொருளுக்கு சம்பந்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்தும் அலுவலரிடமிருந்து பணம் பிடித்தம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே காவல்துறை வாகனங்களுக்கு எரி பொருள் நிா்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்புக்கு மேல் செல்லாமல், திட்டமிட்டு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிா்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை விட, கூடுதலாக எரி பொருள் பயன்படுத்தக் கூடாது. கூடுதல் எரி பொருள் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அரசு கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என்று அரசாணை கூறுகிறது. எனவே அனைத்து அதிகாரிகளும் எரிபொருள் சிக்கனத்தை கடுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com