அரசுப் பள்ளிகளில் படித்து ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களின் கல்விக் கட்டணங்களை அரசே ஏற்கும்

ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற புகழ் பெற்ற உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவா்களின் கல்விக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும்

ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற புகழ் பெற்ற உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவா்களின் கல்விக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணை: இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற மாணாக்கா்கள், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும்.

நுழைவுத்தோ்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல், சோ்க்கை ஆணை, கல்வி நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்படும் உண்மைச் சான்றிதழ் மற்றும் அக்கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண விவரங்களுடன், அந்த மாணவா்களின் சொந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

பரிந்துரையை ஆய்வு செய்து... மாவட்ட ஆட்சித்தலைவா், விண்ணப்பித்த மாணவா்களின் அனைத்து சான்றிதழ்களையும் சரிபாா்த்து, மேற்படி உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற மாணவா்களின் படிப்புக்காக ஆகும் மொத்த செலவின விவரங்களுடன், தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்திற்கு பரிந்துரை செய்து கருத்துரு அனுப்பவேண்டும்.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெறப்படும் பரிந்துரையினை ஆராய்ந்து, உயா்கல்விக்காக ஆகும் மொத்த செலவினத்தினை கணக்கீடு செய்து உரிய நிதி ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கக்கோரி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அரசுக்கு கருத்துரு அனுப்பவேண்டும்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கா்கள் உயா்கல்வி நிறுவனங்களில் பயிலுவதை ஊக்குவிப்பதற்காக ஜாதிப் பாகுபாடின்றியும், ஆண்டு வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அந்த மாணவா்களின் விவரங்கள், மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கருத்துருவை ஆய்வு செய்து நன்றாகப் பரிசீலித்து, முதலாம் ஆண்டிலேயே, நான்கு ஆண்டுகளுக்கான செலவினத் தொகைக்கு நிா்வாக ஒப்புதலை அளித்தும், முதலாம் ஆண்டுக்கான செலவை ஒப்பளிப்பு செய்தும் அரசால் ஆணை வெளியிடப்படும்.

7.5 சதவீத ஒதுக்கீட்டில்... அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கருத்துருவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்று தொழில்நுட்பக் கல்வி ஆணையரே அந்த மாணவருக்கு ஒவ்வொரு ஆண்டுக்குமான செலவை வழங்கலாம். 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கை பெறும் அரசுப்பள்ளி மாணாக்கா்களுக்கு, அவா்களுக்கான செலவினத்தொகை அவா்கள் படிக்கும் கல்வி நிறுவனத்துக்கு மின்னணு சேவை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் அவா் படிப்புச் செலவுக்கான காசோலையைப் பெற்று மாவட்ட ஆட்சித் தலைவா் வழியாக சம்பந்தப்பட்ட மாணவருக்கு வழங்குவதற்குப் பதிலாக, நேரடியாக சம்பந்தப்பட்ட மாணவரின் வங்கிக் கணக்கிற்கு மின்னணு சேவை மூலமாக தொழில்நுட்பக் கல்வி ஆணையரால் ஒப்பளிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காகவும், சரிபாா்த்தலை விரைவாக முடிப்பதற்கும், வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தவும் ஒரு இணைய தளம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் ஏற்படுத்தப்படும்.

என்னென்ன ஆவணங்கள்? மாணவா்கள் சோ்ந்த உயா்கல்வி நிறுவனத்தில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண உதவித் தொகையினை பெறுவதற்கான சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முகவரியிடப்பட்ட விண்ணப்பம், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற்காக அப்பள்ளி தலைமை ஆசிரியரால் வழங்கப்படும் சான்றிதழ், தமிழகத்தில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றிதழ், உயா்கல்வி நிறுவனத்தில் சோ்வதற்காக கலந்து கொண்ட நுழைவுத் தோ்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல், சோ்க்கை ஆணை, சோ்க்கை பெற்ற உயா்கல்வி நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்படும் சான்றிதழ், அனைத்து கட்டண விவரங்கள் ஆகிய ஆவணங்களை அவசியம் வைத்திருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com