பணம் செலுத்தியும் தரிசனத்துக்கு அனுமதியில்லையா? திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ. 45 லட்சம் அபராதம்!

அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் தரிசனம் செய்ய அனுமதிக்காமல் 17 ஆண்டுகளாக பக்தர்களை அலைக்கழித்த திருப்பதி தேவஸ்தானத்திற்கு 45 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு.
திருப்பதி
திருப்பதி

சேலம்: அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் தரிசனம் செய்ய அனுமதிக்காமல் 17 ஆண்டுகளாக பக்தர்களை அலைக்கழித்த திருப்பதி தேவஸ்தானத்திற்கு 45 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.  

சேலம் மாவட்டம், அழகாபுரத்தில் வசித்து வரும் கே.எஸ். இராஜகோபால் என்பவரின் மகன் கே.ஆர்.ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 27-06-2006-ம் தேதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (மேல் சாத்து வஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக (இரு நபர்) ரூ.12,250/- பணம் கட்டிப் பதிவு செய்துள்ளார். அதன் எஸ்.எல். நெ. 924812. ஆனால், அந்த நபருக்கு  தரிசனத்திற்கு 10-07-2020 என்ற தேதி ஒதுக்கப்பட்டு அந்த தேதி ரசீதிலும் குறித்துக் கொடுக்கப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் கரோனா பயம் இருந்த காரணத்தினால் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனால் மேற்படி "மேல் சாத்து வஸ்திர சேவை" என்ற தரிசனம் செய்ய வேறு தேதி அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. பின்னர் அந்த வாய்ப்பு இல்லை என்றும், தரிசனம் செய்ய வேறு தேதி தரப்படும் என்று தேவஸ்தானத்தின் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதனால், 17 வருடம் காத்திருந்தும் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்காதது தேவஸ்தானத்தின் சேவை குறைபாடு என்று கூறி சேலம் நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதன் மீது கடந்த 18-08-2022-ம் தேதி  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில் 1 வருட காலத்தில் மனுதாரருக்கு "மேல் சாத்து வஸ்திர சேவை" என்ற தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் ரூ. 45,00,000/- நஷ்ட ஈடு தொகை சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக வழங்க வேண்டும்.

மேலும், தரிசனத்திற்காகக் கட்டிய ரூ. 12,250/- தொகையையும் உத்தரவு பிறப்பித்த 2 மாத காலத்தில் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 6% வட்டியுடன் சேர்த்துத் தரவேண்டும் என்றும் சேலம் நுகர்வோர் குறைதீர்மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com