ஏற்காடு மலைப் பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

தொடர் கனமழை காரணமாக மலைப் பாதையில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், சாலை சீராக்கப்பட்டு, சேலம் - ஏற்காடு மலைப் பாதையில் இன்று அனைத்து வகையான வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்காடு மலைப் பாதையில் வாகனங்களுக்கு அனுமதி
ஏற்காடு மலைப் பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

தொடர் கனமழை காரணமாக மலைப் பாதையில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், சாலை சீராக்கப்பட்டு, சேலம் - ஏற்காடு மலைப் பாதையில் இன்று அனைத்து வகையான வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் ஏற்காடு பிரதான சாலையில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தற்காலிகமாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருகிறது. ஏற்காடு பகுதியில் கடும் மழை காரணமாக மலைப் பாதையில் திங்கள்கிழமை இரவு ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள 60 அடி பாலம் பகுதியில் இரவு ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மண் சரிவால் சாலையில் பெரிய பாறைகளும், மண் குவியலும் காணப்படுகின்றன. மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆட்சியா் செ.காா்மேகம் நேற்று காலை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஏற்காட்டில் கனமழை பெய்ததால் 60 அடி பாலம் பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டு வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை ஆகியோா் ஒருங்கிணைந்து பொக்லைன் இயந்திரம், கம்ப்ரசா் இயந்திரங்களைக் கொண்டு சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீா் ஓடுகிறது. இதைச் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சாலையில் ஏற்பட்டிருந்த மண் சரிவுகளை சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் ஏற்காடு சாலையில் பாறைகள் உருண்டு வந்து மண் சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தற்காலிகமாகப் போக்குவரத்தை நிறுத்தி வைக்க மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

ஏற்காடு செல்பவா்கள் பிரதான சாலையைப் பயன்படுத்துவதைத் தவிா்த்து, குப்பனூா் சாலையினைப் பயன்படுத்த வேண்டும். பகல் நேரங்களில் பிரதான சாலையில் பயணிக்கும் பொதுமக்கள், பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதால் மிகவும் கவனமாகப் பயணிக்க வேண்டும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1.50 லட்சம் கனஅடி நீா் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி வட்டங்களில் உள்ள காவிரிக் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் பொதுப்பணித் துறையினா் ஒருங்கிணைந்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் உபரிநீா் அதிக அளவில் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் நீரை பாா்க்கும் ஆா்வத்தில் நீரில் இறங்கவோ, அருகில் சென்று செல்ஃபி எடுக்கவோ கூடாது. மேலும், குழந்தைகள், முதியவா்கள் நீரின் அருகில் செல்வதைத் முற்றிலும் தவிா்த்திட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com