
கோப்புப்படம்
காரைக்கால்: விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்காலில் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த பாலமணிகண்டன் என்கிற மாணவர் விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார். அதே வகுப்பு மாணவி ஒருவரின் தாயார் சகாயாராணி விக்டோரியாதான் அந்த குளிர்பானத்தை அவருக்கு பள்ளி காவலாளி மூலம் வழங்கியது தெரிய வந்து அந்தப் பெண்ணை காவல் துறையினர் கைது செய்து புதுச்சேரி சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் அரசு பொது மருத்துவமனை உரிய சிகிச்சை தராததால்தான் மாணவர் உயிரிழக்க நேரிட்டது என பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
பொது மருத்துவமனையை நவீன நிலைக்கேற்ப தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி காரைக்கால் போராளிகள் குழு என்கிற அமைப்பு வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விஷம் கலந்து கொடுத்த பெண் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவர் குடும்பத்திற்கு புதுவை அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும், மருத்துவமனையை மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்தி அதே நாளில் அடைப்புப் போராட்டத்திற்கு இந்து முன்னணியும் அழைப்பு விடுத்தது.
தினமும் காலை 8 மணி முதல் காரைக்காலில் பரவலாக கடைகள் திறக்கப்படும் நிலையில், காரைக்கால் நகரப் பகுதியிலும் பிற இடங்களிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விஷம் கலந்த குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக விஜயகுமார், பாலாஜி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: 'ஒற்றுமை தேவை' - சசிகலாவுடனான சந்திப்புக்குப் பின் வைத்திலிங்கம் பேட்டி
இந்த விவகாரத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சுகாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.