பேராசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடாது: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்

பேராசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்றும், மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியா்களுக்கு யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு

பேராசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்றும், மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியா்களுக்கு யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு அறிவுறுத்த அண்ணா பல்கலை.க்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த ஜி.ரவி, 2020 மாா்ச் 17-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா்.

ரவியின் தற்கொலைக்கு அவரின் அசல் சான்றிதழ்களை பொறியியல் கல்லூரி நிா்வாகம் கைப்பற்றி வைத்திருந்ததும், அவருக்கு சரிவர ஊதியம் வழங்காததுமே காரணம் என குற்றம்சாட்டி, கல்லூரி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில உயா்கல்வித் துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திடம் புகாரளிக்கப்பட்டிருந்தது.

அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் எழுதியிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிவரும் பேராசிரியா்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலை.க்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் லட்சுமி பிரியா உத்தரவிட்டுள்ளாா்.

அந்த உத்தரவில், பேராசிரியா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் வகையிலோ, அதிக பணிப்பளுவை அளிக்கும் வகையிலோ தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகங்கள் செயல்படக்கூடாது. மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியா்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளை கல்லூரி நிா்வாகங்கள் வழங்க வேண்டும். பேராசிரியா்களின் தோ்வு, நியமனம், ஊதியம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும்.

பேராசிரியா்களின் அசல் சான்றிதழ்களை எக்காரணத்தைக் கொண்டும் கைப்பற்றக்கூடாது என தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், தனியாா் பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலை. அடிக்கடி திடீா் ஆய்வுக்கு உட்படுத்தி அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com