அரசு நிலத்தை மகள் பெயருக்கு பட்டா மாற்றிய விஏஓ பணி நீக்கம்!

அரசு நிலத்தை மகள் பெயருக்கு பட்டா மாற்றிய விஏஓ பணி நீக்கம்!

நெல்லை மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை அரசு நிலத்தை மகள் மற்றும் மருமகள் பெயருக்கு பட்டா மாற்றி கொடுத்த விஏஓ மற்றும் தலையாரி இருவர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை அரசு நிலத்தை மகள் மற்றும் மருமகள் பெயருக்கு பட்டா மாற்றி கொடுத்த விஏஓ மற்றும் தலையாரி இருவர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த வி.ஏ.ஓ மற்றும் தலையாரி இருவரும் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச வீட்டுமனை பட்டாவை தங்கள் குடும்பத்தினருக்கு வழங்கிய விவகாரத்தில் சமீபத்தில் ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதாவது நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக( வி.ஏ.ஓ) பணிபுரிந்த மாடசாமி கடந்த 2018ம் ஆண்டு ஆரைக்குளம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை தனது மகள் மகராசி பெயரில் விதிமீறி இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளார். 

அதேபோல் அவரிடம் தலையாரியாக பணிபுரிந்த மந்திரமூர்த்தியின் மருமகள் பெயருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கபட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை விஏஓ மாடசாமி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மகளுக்கு வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் இலவச வீட்டுமனை பட்டாவை 20 ஆண்டுகளுக்கு பிறகே நத்தம் பட்டவாக மாற்ற முடியும் என்று அரசு விதிமுறை இருக்கும் நிலையில், அந்த விதியையும் மீறி விஏஓ மாடசாமி தனது மகளுக்கு இலவச பட்டா வழங்கிய ஒரே ஆண்டில், அந்த பட்டாவை அவரது மகள் மற்றும்  மாடசாமியின் மனைவி பெயருக்கு பத்திரப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம்  மனு அளித்தனர். சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் கடந்த வாரம் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் இதன் அடிப்படையில் நெல்லை கோட்டாட்சியர் சந்திரசேகர் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் சட்டத்துக்கு புறம்பாக அரசு நிலத்தை தங்கள் மகள் மற்றும் மருமகளுக்கு பட்டா மாற்றி கொடுத்தது உறுதியானது. 

இந்த நிலையில் விஏஓ மாடசாமி மற்றும் தலையாயரி மந்திரமூர்த்தி இருவரையும் நிரந்த பணிநீக்கம் செய்து கோட்டாட்சியர் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் உத்தரவின் பேரிலேயே கோட்டாட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே நெல்லையில் அரசு பணத்தை கையாடல் செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் சில மாதங்களுக்கு முன்பு நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அரசு நிலத்தை ஆக்கிரமித்த விஏஓ மற்றும் தலையாயரி தற்போது நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்ட அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com