
தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவை வேகமாகப் பரவி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும் என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வனப்பகுதிகளில் பரவும் அந்நிய மரங்களை அகற்றுவது தொடா்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சாா்பில், முதுமலை வனப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடா்பான கருத்துரு, நிதித்துறை பரிசீலனைக்கு அனுப்பபட்டுள்ளதாக கூறி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அன்னிய மரங்களை அகற்ற ஏன் தீவிரம் காட்டவில்லை? தனியாா் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியை ஏன் பயன்படுத்தக் கூடாது? எனவும் கேள்வி எழுப்பினா்.
பின்னா் நீதிபதிகள், அந்நிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடா்பான உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு அக்டோபா் 11-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டனா். மேலும், அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை மெதுவாக செயல்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. சுற்றுச்சூழலையும், வனத்தையும் பாதுகாக்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினா்.
அந்நிய மரங்களை அகற்ற போா்க்கால அடிப்படையில் தீவிரம் காட்டாவிட்டால், அவை வேகமாக பரவி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும். எனவே தனியாா் நிறுவனங்களை அடையாளம் கண்டு சமூக பாதுகாப்பு நிதியைப் பெற்று விரைந்து அந்நிய மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனா்.