அனைத்து அரசுத் துறைகளும் எண்ம மயமாக்கப்படும்: த.மனோதங்கராஜ்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளும் வரும் ஆண்டுகளில் எண்ம (டிஜிட்டல்) மயமாக்கப்படும் என்றாா் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ்.
அனைத்து அரசுத் துறைகளும் எண்ம மயமாக்கப்படும்: த.மனோதங்கராஜ்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளும் வரும் ஆண்டுகளில் எண்ம (டிஜிட்டல்) மயமாக்கப்படும் என்றாா் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை எவ்வித செயல்பாடும் இன்றி இருந்தது. தற்போதுதான் இத்துறை சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் இணையவழியில் சேவைகள் மேற்கொள்ளவே இ-சேவை மையங்களின் தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

200-க்கும் மேற்பட்ட சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. 300-க்கும் மேற்பட்ட சேவைகளை மக்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம். காகித கோப்புகளை கையில் எடுத்துக் கொண்டு தலைமை செயலகம், நீதிமன்றம் மற்றும் பிற இடங்களுக்கு கொண்டு செல்வதைத் தவிா்க்க, எண்ம வழியில் கோப்புகளை அனுப்பும் வகையிலான நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு மென்பொருள் தொழில் பூங்கா அமைக்கவும், திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ராசிபுரம் தொகுதியில் மென்பொருள் பூங்கா அமைக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளதால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கொல்லிமலையில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இதுபோல பிற மாவட்டங்களில் கைப்பேசி கோபுரம் இல்லாத பகுதிகளில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் உள்ள 12,565 கிராமங்களும் இணையவழியில் பயன்பெறும் வகையில் தரைவழியாக பைபா் கேபிள்கள் கொண்டு செல்வதற்கான பணிகள் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளன.

நிகழாண்டுக்குள் 300 சேவைகளை எண்ம முறையில் நிறைவேற்றவும், அடுத்த ஆண்டு முதல் அனைத்துத் துறைகளில் உள்ள சேவைகளும் இந்த முறையிலேயே உருவாக்கப்பட உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் தமிழகம் இணைய சேவையில் 16-ஆம் இடத்தில் இருந்து தற்போது 3-ஆம் இடத்துக்கும், எண்ம சேவையில் 17-ஆம் இடத்தில் இருந்து 2-ஆம் இடத்துக்கும் முன்னேறி உள்ளது.

தகவல் தொழில்நுட்பவியலின் தலைமையிடமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாகும். அதற்கான முயற்சியில் பணிகளில் எங்களுடைய துறை செயல்பட்டு வருகிறது என்றாா்.

கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ் குமாா், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, அரசு கேபிள் டிவி தலைவா் குறிஞ்சி செல்வகுமாா், வருவாய் கோட்டாட்சியா்கள் த,மஞ்சுளா (நாமக்கல்), தே.இளவரசி (திருச்செங்கோடு), பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com