பாபநாசம் அருகே பெண்ணைக் கடித்த கரடி: அச்சத்தில் கிராம மக்கள்

பாபநாசம் அருகே கோட்டை விளைபட்டி கிராமத்தில் நுழைந்த கரடி பெண்ணைக் கடித்துக் காயப்படுத்தியது.
கோட்டை விளைபட்டி கிராமத்தில் கரடி தாக்கியதில் காயமடைந்த கலையரசி
கோட்டை விளைபட்டி கிராமத்தில் கரடி தாக்கியதில் காயமடைந்த கலையரசி

அம்பாசமுத்திரம்: பாபநாசம் அருகே கோட்டை விளைபட்டி கிராமத்தில் நுழைந்த கரடி பெண்ணைக் கடித்துக் காயப்படுத்தியது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி பெண்ணைக் கடித்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலையடிவார கிராமம் கோட்டை விளைபட்டி. வனப்பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இது போன்ற மலையடிவார கிராமங்களில் வனவிலங்குகளான கரடி, மிளா, காட்டு யானை உள்ளிட்டவை வனப்பகுதியை விட்டு வெளியேறி தனியார் விளைநிலங்களில் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்துவதோடு, அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பொதுமக்களையும் தாக்கி காயப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை மலையடிவார கிராமமான கோட்டைவிளைபட்டி கிராமத்தில் நுழைந்த கரடி, தெற்குத்தெருவைச் சேர்ந்த ராஜதுரை மனைவி கலையரசி (40) என்பவரைக் கடித்துக் காயபடுத்தியுள்ளது. கலையரசி சத்தமிட்டதைக் கேட்டு  அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து கரடியை விரட்டியுள்ளனர். கடித்ததில் காயமடைந்த கலையரசியை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

வனப்பகுதியிலிருந்து வனவிலங்குகள் வெளியேறாமல் இருக்க அகழி, மின்வேலி உள்ளிட்டவை அமைக்க பல ஆண்டுகளாக கிராம மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் வனத்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் கடந்த சில நாள்களுக்கு முன் விக்கிரமசிங்கபுரம் துணை மின்நிலையம், விக்கிரமசிங்கபுரம் 6ஆவது வார்டு ஆகிய பகுதிகளில் கரடி நடமாட்டம் இருந்ததையடுத்து கரடியைப் பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் வனத்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று மீண்டும் ஊருக்குள் புகுந்த கரடி பெண்ணைக் கடித்து தாக்கியுள்ளது.

எனவே, உடனடியாக கரடியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மலையடிவார கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக  தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com