திண்டுக்கலில் பாஜக பிரமுகரின் கடைக்கு தீ வைப்பு: பாஜகவினர் சாலை மறியல்

திண்டுக்கலில் பாஜக பிரமுகரின் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 
திண்டுக்கலில் பாஜக பிரமுகரின் கடைக்கு தீ வைப்பு: பாஜகவினர் சாலை மறியல்

திண்டுக்கல்: திண்டுக்கலில் பாஜக பிரமுகரின் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்பால்ராஜ்(40). இவர் திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி பாஜக தலைவராக உள்ளார்.

இவர், பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். குடைப்பாறைப்பட்டி பகுதியிலேயே அதற்கான கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அந்த கடைக்கு சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். அதில், கடையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 4 மோட்டார் சைக்கிள்கள் முழுமையாக தீயில் எரிந்து நாசமடைந்தன.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் செந்தில்பாலாஜி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமிராவில் 2 நபர்கள் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. 2 நபர்கள் மட்டுமே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா, மேலும் பலருக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பாஜகவினர் சாலை மறியல்:

இதனிடையே செந்தில்பால்ராஜ் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாஜகவினர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ஜி.தனபாலன் தலைமையில் குடைப்பாறைப்பட்டியில் திரண்டனர்.

தீ வைப்பு சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை துரிதமாக கைது செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் ஜி.தனபாலன் கூறியதாவது:

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்டனர். அதற்கு சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் வாகனங்கள் மீது திட்டமிட்டு தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது திண்டுக்கல் நகரிலும், பாஜக பிரமுகர் செந்தில் பால்ராஜின் கடைக்கு மர்ம நபர்கள் தீவைத்து வாகனங்களை எரித்துள்ளனர்.

காவல்துறையினரை சுதந்திரமாக செயல்படவிடாமல் திமுக அரசு தடுத்து வருகிறது. சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குண்டர்களுக்கு திமுக அமைச்சர்களே ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர்களின் நிர்பந்தத்தால் வழக்குப்பதிவு செய்தாலும், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் காவல் துறையினர் பிணையில் விடுவித்து வருகின்றனர்.

தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்யவில்லையெனில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com