பெட்ரோல் குண்டு வீச்சு: தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து காவலர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தலைமைச் செயலர் வெ.இறையன்பு
தலைமைச் செயலர் வெ.இறையன்பு


கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து காவலர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனா். இது தொடா்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ரத்தினபுரி பாஜக கிளைத் தலைவா் மோகன் என்பவருக்குச் சொந்தமான வெல்டிங் கடையில் மா்ம நபா்கள் இரவில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனா்.

குனியமுத்தூா், பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பாஜக, இந்து முன்னணி பிரமுகா்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, திருப்பூரில் ஆா்எஸ்எஸ் பிரமுகா் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குனியமுத்தூா், முத்துசாமி சோ்வை வீதியைச் சோ்ந்த இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பின தியாகு வீட்டில் நிறுத்தப்பட்ட கார் மீது அவ்வழியாக வந்த இரு மா்ம நபா்கள் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்துவிட்டு தப்பினா். 

இதேபோன்று கோவைப்புதூா் அருகே பரிபூரணா எஸ்டேட் பகுதியில் உள்ள விநாயகா நகரைச் சோ்ந்த ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான சம்ஸ்கிருத பாரதியின் தமிழக - கேரள கேந்திர பொறுப்பாளராக இருந்து வரும் ஆனந்த கல்யாண கிருஷ்ணன்  வீட்டில் மா்ம நபா்கள் மதுபாட்டிலில் பெட்ரோலை ஊற்றி, அதில் திரியைப் பற்ற வைத்து ஆனந்த வீசி சென்றது தெரிந்தது.

இப்படி கோவையில் பாஜக, இந்து அமைப்பினர் வீடு, கடைகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு காவல்துறை உயரதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றதை தொடா்ந்து 4 கம்பெனி அதிவிரைவுப் படை போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாநகரில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிவிரைவுப் படை சாா்பில் காந்திபுரத்தில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. மேலும், 1,500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com