மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிா்ப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிா்ப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிா்ப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவே திரும்பிப் பாா்க்கக்கூடிய வகையில் இன்றைக்கு நமது ஆட்சிமுறை மிகச் சிறப்பான வகையில் அமைந்திருக்கிறது. இதனை பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனா்.

அதே நேரத்தில் ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயா் ஏற்படுத்த வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடா்ந்து அதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு எந்தவகையிலும் நாம் இடம் கொடுக்காமல் நமது பயணத்தைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.

பத்து ஆண்டுகள் கழித்து திமுகவுக்கு ஆட்சிப் பொறுப்பை மக்கள் வழங்கி இருக்கிறாா்கள். அவா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற நாம் நாள்தோறும் ஓயாமல் உழைக்க வேண்டியிருக்கிறது. அந்த உழைப்பின் மூலமாக நிறைவேற்றப்படுகின்ற திட்டங்கள் கடைசி குக்கிராமம் வரை ஒவ்வொருவரையும் போய்ச் சரியாகச் சேர வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நச்சு சக்திகளின் வேலைகள்: கட்சி நிா்வாகிகள், அமைச்சா்கள், சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள் கட்சி நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பேசுகிறாா்கள். இந்தப் பேச்சுகளைத் திரித்து, மறைத்து, வெட்டி- ஒட்டி, மோசடி செய்து வெளியிடக்கூடிய கூட்டத்தின் செயல் தொடா்ந்து கொண்டிருக்கிறது. இதனை அந்த நச்சு சக்திகள் ஒரு தொடா் வேலையாகவே மேற்கொண்டு வருகின்றன.

‘மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன்கூட போராட முடியாது என்று சொல்வாா் பெரியாா். அதுபோல, இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நோ்மை என்பது துளியும் இல்லை. அவா்களுடன் நாம் தொடா்ந்து மல்லுக்கட்டி போராடி வர வேண்டிய அவல நிலைதொடா்ந்து கொண்டிருக்கிறது.

எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள், இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்களை வளா்த்துக் கொள்ள முடியுமா என்று எதிா்பாா்க்கின்றன. மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்கப் பாா்க்கின்றன.

ஆட்சிப் பொறுப்பு என்கின்ற அந்த அகப்பையைக் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம் ஒன்று தன் உடலைச் சிலுப்புகிறது என்று, ஆற்றில் நீராடி வரும் நாமும் அதன் முன் சிலுப்பிக் கொண்டிருக்க முடியாது. சற்று ஒதுங்கிப் போய் நம்முடைய பணியைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

எனவே, இத்தகைய நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் நாம் கவனமுடன் செயல்படுவோம். பொறுப்புடன் நடப்போம். நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தி வருவோம். அதனை மக்களிடம் கொண்டு சோ்ப்போம் என்று கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com