இளம் வல்லுநர்களுக்கான புத்தாய்வுத் திட்டம்: முதல்வர் தொடக்கிவைத்தார்

இளம் வல்லுநர்களுக்கான இரண்டாண்டு புத்தாய்வுத் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
இளம் வல்லுநர்களுக்கான இரண்டாண்டு புத்தாய்வுத் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
இளம் வல்லுநர்களுக்கான இரண்டாண்டு புத்தாய்வுத் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

இளம் வல்லுநர்களுக்கான இரண்டாண்டு புத்தாய்வுத் திட்டத்தினை 
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

தமிழக அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை சார்பில், சென்னையில் உள்ள அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இளம் வல்லுநர்களுக்கு, 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியுடன் கூடிய இரண்டாண்டு புத்தாய்வுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்பட்டுள்ள  30 இளம் வல்லுநர்களுக்கு மடிக்கணினி வழங்கி புத்தாய்வு திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

தமிழ்நாடு அரசு தனது அனைத்துத் துறைகளிலும் சிறந்த நல்லாட்சியை வழங்கிட பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு இரண்டாண்டு கால "தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை (2022-2024)" அறிமுகப்படுத்தியுள்ளது. திறன்மிகு இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டம், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தை கல்வி பங்காளராக கொண்டு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு, அரசின் உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து சென்னையிலுள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்படும்.

இப்பயிற்சியின் நிறைவில், (i) நீர்வளங்களை மேம்படுத்துதல் (Augmentation of Water Resources), (ii) வேளாண் உற்பத்தி, விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துவதற்குரிய இணைப்புகளை உருவாக்குதல் (Agriculture Production, Productivity and Creating of Marketing Linkages), (iii) அனைவருக்கும் வீடு (Housing For All), (iv) கல்வித் தரத்தை உயர்த்துதல் (Improving Educational Standards), (v) சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்துதல் (Improving Health Indicators), (vi) அனைவருக்கும் உள்ளடங்கிய சமூகம் (Social Inclusion), (vii) உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி (Infrastructure and Industrial Development), (viii) திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு (Skill Development and Enterpreneurship Development), (ix) முறையான கடன் (Institutional Credit), (x) மரபு மற்றும் பண்பாடு (Heritage and Culture), (xi) சுற்றுச்சூழல் சமநிலை (Ecological Balance), (xii) தரவு நிர்வாகம் (Data Governance) ஆகிய ஒவ்வொரு “கருப்பொருள் பகுதிக்கும்” (Thematic Areas) தொடர்புடைய அரசுத் துறைகளுடன் இரண்டு வல்லுநர்கள் வீதம் மொத்தம் 24 வல்லுநர்களும், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கண்காணிப்புப் பிரிவில் ஆறு வல்லுநர்களும் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 

மேலும், இளம் வல்லுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, மதிப்பீடு செய்வது, இடையூறுகளை கண்டறிவது மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுப்பதற்கு உதவுவது ஆகியவை அவர்களது முக்கிய பணிகளாகும்.

இவை, சேவை வழங்கலில் (Service Delivery) ஏதேனும் இடைவெளிகள் இருப்பின் அவற்றினை நிவர்த்தி செய்திடவும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு நிகரான அரசின் சேவைகளை வழங்கிடவும் வழிவகை செய்யும். இப்பணிகளை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு இளம் வல்லுநர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் மடிக்கணினிகளை வழங்கி, தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளிலும், நல்லாட்சி வழங்குவதிலும் இளம் வல்லுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி முழுமையான அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டுமென முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இப்புத்தாய்வுத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் கலந்து கொள்ளும் இளம் வல்லுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.65,000/- மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான பயணச் செலவு, கைப்பேசி மற்றும் தரவு பயன்பாடு போன்ற செலவினத்திற்காக மாதம் ரூ.10,000/- கூடுதல் தொகையாக வழங்கப்படும்.

இரண்டு வருட புத்தாய்வுத் திட்டத்தை திருப்திகரமாக நிறைவு செய்யும் வல்லுநர்களுக்கு, பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் பொதுக்கொள்கை மற்றும் மேலாண்மையில் முதுகலை சான்றிதழ் (Post Graduate Certificate in Public Policy and Management) வழங்கும். இதுதவிர, ஏற்கனவே முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் மூலம் முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கு வாய்ப்பும் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர்துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை சிறப்புச் செயலாளர் சீ. நாகராஜன், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளி - பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன இயக்குநர் முனைவர் அசித் கே. பர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com