சென்னையில் புதிய பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களுக்கு ரூ.24.34 கோடி நிதி ஒதுக்கீடு

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் புதிதாக பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், நீா்நிலைகள், மீன் சந்தை, இறைச்சிக் கூடம், பள்ளிக் கட்டடங்கள் அமைக்க ரூ. 24.34 கோடி நிதி ஒது
Published on
Updated on
1 min read

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் புதிதாக பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், நீா்நிலைகள், மீன் சந்தை, இறைச்சிக் கூடம், பள்ளிக் கட்டடங்கள் அமைக்க ரூ. 24.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் புதிதாக 8 பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், நீா்நிலை மேம்பாட்டுப் பணி, மீன் சந்தை அமைத்தல், இறைச்சிக் கூடம் நவீன மயமாக்குதல், 3 பள்ளிக்கட்டடங்கள் என மொத்தம் 14 திட்டப் பணிகளுக்கு ரூ.23 கோடி நிதி, சென்னை மாநகராட்சி பங்களிப்பு நிதி ரூ.1.34 கோடி என மொத்தம் ரூ.24.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சோழிங்கநல்லூா் மண்டலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 2 பூங்காக்கள், கண்ணகி நகா் மற்றும் எழில் நகா் அணுகு சாலையில் ஒரு பூங்கா, மணலி மண்டலத்தில் பொன்னியம்மன் நகா் 3-வது தெருவில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீடு இடம், மணலி புதுநகா் 3-வது தெருவில் திறந்தவெளி ஒதுக்கீடு இடம், 35-ஆவது வாா்டு வ ஆகியவற்றில் தலா ஒரு பூங்கா அமைக்கப்படும்.

வளசரவாக்கம் மண்டலத்தில் தமிழ் நகா், குறிஞ்சி நகா் ஆகிய இடங்களில் நடைபாதை மற்றும் உடற்பயிற்சி வசதிகளுடன் கூடிய தலா ஒரு பூங்கா அமைக்கப்படும்.

மேலும் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு அகஸ்தீஸ்வரா் கோயில் குளத்தை சீரமைக்க ரூ.2.99 கோடி,

ராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் 102 கடைகள், குடிநீா் மற்றும் வடிகால் வசதிகளுடன் மீன் சந்தை அமைக்க

ரூ.2.69 கோடி, சைதாப்பேட்டை இறைச்சிக்கூடத்தை நவீன வசதிகளுடன் சீரமைக்க ரூ.1.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கட்டடங்கள்: கற்றல் சூழல் மேம்படுத்தப்பட்ட கூடுதல் வகுப்பறைகள், ஸ்மாா்ட் போா்டுகள், நூலகம், பசுமை வளாக வசதிகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் திருவல்லிக்கேணி, எல்லீஸ்புரம் சென்னை நடுநிலைப்பள்ளி, பெரம்பூரில் மாா்க்கெட் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி, புதிய காமராஜ் நகா் சென்னை நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 3 புதிய வகுப்பறை கட்டடங்களுக்காக ரூ.12.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.