
திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சுதந்திர தின நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தெருக்கள் தோறும் கருப்புக் கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி அருகேயுள்ள கீழநத்தம் வடக்கூரைச் சேர்ந்த நாராயணன் மகன் ராஜாமணி (32). இவர் கீழநத்தம் ஊராட்சியின் 2 ஆவது வார்டு உறுப்பினராகப் பணியாற்றி வந்தார். கடந்த 13 ஆம் தேதி கீழநத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. பலத்த காயமடைந்த ராஜாமணியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி, இசக்கி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனைக்குப் பின்பு ராஜாமணியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து திங்கள்கிழமை கிராமத்தில் உள்ள கோயில் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சுதந்திர தினத்தை கொண்டாட மறுத்து தெருக்கள்தோறும் கருப்புக்கொடி கட்டி கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், கீழநத்தம் ராஜாமணி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும். அவரது மனைவி வடிவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம் என்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...