மறைந்த தேமுதிக தலைவர் விஜய்காந்திற்கு அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
கோயம்பேடு மேம்பாலம், கட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். ரசிகர்களின் வருகையால் சென்னை கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தேமுதிக அலுவலகம் முன்பு குவிந்த தொண்டர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, கோயம்பேடு மேம்பாலம் அருகே ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பாடி மேம்பாலம், திருவீதி அம்மன் சர்வீஸ் ரோடு, சாந்திகாலனி வழியாகச் செல்ல போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதால், அவரைக் காண ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.
விஜயகாந்த் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.