நான்கு தென் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட 20 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் பணி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களின் சில வட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.6 ஆயிரமும், நான்கு மாவட்டங்களில் லேசான பாதிப்பை சந்தித்தோருக்கு தலா ஆயிரம் ரூபாயும் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் பொது மக்களின் உடைமைகளுக்கு கடும் சேதங்கள் ஏற்பட்டன. இந்த நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.6 ஆயிரமும், லேசான பாதிப்புகளைச் சந்தித்தோருக்கு தலா ஆயிரம் ரூபாயும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, மொத்தமாக 20 லட்சத்து 94 ஆயிரத்து 924 குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
திருநெல்வேலியில் சில வட்டங்களில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 652 குடும்ப அட்டைதாரா்களுக்கும், தூத்துக்குடியில் சில வட்டங்களில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 108 குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மேலும், திருநெல்வேலியில் சில வட்டங்களில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 705 குடும்ப அட்டைதாரா்களுக்கும், தூத்துக்குடியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 717 குடும்ப அட்டைதாரா்களுக்கும், கன்னியாகுமரியில் 5 லட்சத்து 77 ஆயிரத்து 803 குடும்ப அட்டைதாரா்களுக்கும், தென்காசியில் 4 லட்சத்து 74 ஆயிரத்து 939 குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 20 லட்சத்து 94 ஆயிரத்து 924 குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண நிதி அளிக்க தமிழக அரசு உத்தரவில் வகை செய்யப்பட்டுள்ளது.