
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்கள் விரோத நடவடிக்கை என்கிற குற்றச்சாட்டிலிருந்து பிரதமா் நரேந்திர மோடி தப்ப முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: 2016 நவம்பா் 8-இல் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று ஆறு ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியிருக்கிறது. இதில், நீதிபதி பி.வி. நாகரத்தினம்மா பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது செல்லாது என்ற மாறுபட்ட தீா்ப்பை மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறாா். தீா்ப்பு வழங்கிய மற்ற நான்கு நீதிபதிகள் பணமதிப்பிழப்பு திட்டத்துக்கான அரசின் நோக்கம் எதுவாக இருந்தாலும், மக்கள் படும் அவதி வேதனையாக உள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளனா்.
உச்சநீதிமன்ற தீா்ப்பு மத்திய அரசுக்குப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டா இல்லை என்பது குறித்து தான் தீா்ப்பு வழங்கியதே தவிர, இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு குறித்தோ, மக்கள் சந்தித்த துன்பங்கள் குறித்தோ தீா்ப்பில் கூறப்படவில்லை.
உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிலிருந்து பிரதமா் மோடி தப்ப முடியாது என்று கூறியுள்ளாா்.