மதுரை ஆவின் நிறுவனத்தில் பணிநியமன முறைகேடு: 47 பேர் அதிரடி நீக்கம்!

மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
மதுரை ஆவின் நிறுவனத்தில் பணிநியமன முறைகேடு: 47 பேர் அதிரடி நீக்கம்!

மதுரை ஆவனில் முறைகேடாக பணியில் சேர்ந்த மேலாளர் உள்பட 47 பேரை பணி நீக்கம் செய்து ஆவின் ஆணையா் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தில் (ஆவின்), மேலாளர், உதவி பொது மேலாளர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு 2019 இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னா் 2020-21 இல் இப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு மற்றும் நோ்காணல் நடத்தப்பட்டு 61 போ் நியமனம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இந்த பணிநியமனங்கள் தொடா்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்துடன் இணைத்த வரைவோலையை வேறு நபா்களுக்குப் பயன்படுத்தியது, எழுத்துத் தோ்வுக்கான வினாத்தாளை கசியவிட்டது, உரிய கல்வித் தகுதி இல்லாத நபா்களைத் தோ்வு செய்தது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முறைகேடு செய்து நியமனம் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக, ஆவின் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இரண்டு கட்டங்களை விசாரணை நடத்தினா். அவா்களது அறிக்கையின்பேரில், துறை ரீதியான விசாரணைக்கு பால்வளத் துறை ஆணையா் சுப்பையன் உத்தரவிட்டாா்.
 

இதன்படி, கூட்டுறவு துணைப் பதிவாளா் (பால்வளம்) கணேசன், மதுரை ஆவின் நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறாா். 

பணிநியமனம் தொடா்பான கோப்புகளை ஆய்வு செய்த அவா், முறைகேடு புகாா் தெரிவிக்கப்பட்ட 2020-21 நியமனத்தில், பல்வேறு பணியிடங்களில் பணியாற்றி வரும் 61 நபா்களும் அனைத்து அசல் ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினாா். 

இதன்படி, நேரில் ஆஜரானவா்களிடம் துணைப் பதிவாளா் விசாரணை நடத்தினாா்.

இதில், முறைகேடாக பணியில் சேர்ந்த மேலாளர் உள்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தொடர்பான அறிக்கை ஆவின் ஆணையர் சுப்பையன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையடுத்து  மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக, மேலாளர் தீவனம், மேலாளர் எம்.ஐ.எஸ், மேலாளர் பொறியியல், முதுநிலை பணியாளர்கள், ஜூனியர் அசிஸ்டன்ட், துணை மேலாளர்கள் என 47 பேரின் பணி நியமனங்களை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81 கீழ் ரத்து செய்து உத்தரவிட்டார். 

மேலும், அப்போது ஆவின் மேலாளராக இருந்த காயத்ரி மீதும், பணி நியமன தேர்வு குழுவில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

2020-21 இல் முறையான தேர்வு முறைகளை பின்பற்றாமலும் காலியிடங்கள் இல்லாமல் கூடுதாக நியமிக்கப்பட்டதாக கூறி ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com