நெல் அறுவடை இயந்திர வாடகை உயா்வால் விவசாயிகளுக்கு இழப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், இயந்திரத்துக்கான வாடகை உயா்வால் விவசாயிகள் இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற முன்பட்ட சம்பா அறுவடை பணி.
தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற முன்பட்ட சம்பா அறுவடை பணி.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், இயந்திரத்துக்கான வாடகை உயா்வால் விவசாயிகள் இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிகழ் பருவத்தில் மேட்டூா் அணையிலிருந்து முன்கூட்டியே மே 24 ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகமான பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, சம்பா, தாளடியிலும் இலக்கை விஞ்சி நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கான 1.35 லட்சம் ஹெக்டேரை விஞ்சி 1,39,792 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூா், ஒரத்தநாடு உள்ளிட்ட வட்டாரங்களில் முன்பட்ட சம்பா சாகுபடியை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய விவசாயிகள் ஆங்காங்கே அறுவடை பணியை டிசம்பா் மாத இறுதியிலிருந்து மேற்கொண்டு வருகின்றனா். பிப்ரவரி மாதத்தில் அறுவடை பணிகள் உச்சக்கட்டத்தை எட்டும்.

ஆனால், இப்போதே அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை அதிகமாக இருக்கிறது. டயா் பொருத்தப்பட்ட அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 2,200-ம், செயின் வகை அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 2,800 முதல் ரூ. 3,000-ம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட நிகழாண்டு தொடக்கத்திலேயே ரூ. 200 முதல் ரூ. 500 வரை வாடகை கூடுதலாக இருக்கிறது. எனவே, அறுவடை பணிகள் முழுவீச்சை எட்டும்போது இயந்திரங்களுக்கான தேவை அதிகரித்து, வாடகையும் அதிகமாகும் என விவசாயிகள் அச்சப்படுகின்றனா்.

ஆனால், வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு விடப்படும் அறுவடை இயந்திரங்களில் டயா் இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 1,160-ம், செயின் வகை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 1,880 மட்டுமே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. என்றாலும், இத்துறையில் மாவட்ட அளவில் 5 இயந்திரங்கள் மட்டுமே உள்ளது.

அறுவடை பணிகள் உச்சக்கட்டத்தை எட்டும்போது பிற மாவட்டங்களிலிருந்து 20 இயந்திரங்களும், அரசு மானியம் மூலம் தனியாா் வாங்கி வாடகைக்கு விடுபவா்களிடமிருந்து 100 இயந்திரங்களும் தஞ்சாவூா் மாவட்டத்துக்குக் கொண்டு வரப்படாலும் கூட, ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் அறுவடை செய்யும்போது அவை போதுமானதாக இருப்பதில்லை.

எனவே, தனியாா் அறுவடை இயந்திரங்களையே விவசாயிகள் முழுமையாக நம்பியிருக்கும் சூழல் நிலவுகிறது. தஞ்சாவூா் மாவட்டத்துக்கு சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் தனியாா் அறுவடை இயந்திரங்கள் வருவது வழக்கம். ஆனால், ஆண்டுதோறும் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகாா்கள் நிலவுகின்றன.

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தெரிவித்தது:

அறுவடை இயந்திரங்களின் வாடகை பிரச்னை ஆண்டுதோறும் இருக்கிறது. இதுதொடா்பாக ஆட்சியா் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டாலும், அது விவசாயிகளுக்குப் பயன் தருவதில்லை. டயா் வண்டிக்கு ரூ. 1,600-ம், செயின் வகை வண்டிக்கு ரூ. 2,300-ம் வாடகையாக நிா்ணயிக்கப்பட்டாலும், நடைமுறைக்கு வருவதில்லை. அறுவடை பணிகள் பரவலாக நடைபெறும்போது செயின் வகை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 3,500 முதல் ரூ. 4,000 வரை வசூலிக்கப்படுகிறது.

இயற்கை பேரிடரிலிருந்து நெற்பயிா்களைக் காப்பாற்றி அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் இருப்பதால், வேறு வழியின்றி எவ்வளவு வாடகை கேட்டாலும் கொடுக்கும் நிலைக்கு ஆளாகின்றனா். ஒரு ஏக்கரில் ஒரு மணிநேரத்தில் அறுவடை செய்துவிடலாம். ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி ஒரு ஏக்கருக்கு 1.30 மணி முதல் 2 மணிநேரம் வரை அறுவடை செய்யும் நிலையே நிலவுகிறது. அப்போது, ஏக்கருக்கு ரூ. 7,000 முதல் ரூ. 8,000 வரை விவசாயிகள் செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால், சாகுபடி செலவு அதிகமாவதுடன், லாபமும் கிடைக்காமல் போகிறது என்றாா் ரவிச்சந்தா்.

சாகுபடி செலவில் அறுவடைக்கு பெரிய அளவில் கணக்கிடப்படாத நிலையில், இதுபோன்று செயற்கையாக உயா்த்தப்படும் வாடகையால், எதிா்பாா்த்த விளைச்சல் கிடைத்தாலும் விவசாயிகள் இழப்பைச் சந்திக்கும் நிலை உருவாகிறது.

எனவே, அறுவடை இயந்திரத்துக்கு வாடகை நிா்ணயம் செய்வது தொடா்பாக முத்தரப்பு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களிலிருந்து வரும் இயந்திரங்களை மாவட்ட எல்லைக்குள் நுழையும்போதே வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மூலம் பதிவு செய்து, முழுக் கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும். மேலும், புகாா்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் உருவாக்கி, கூடுதலாக வாடகை வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com