
நாமக்கல்: பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ள காவிரி, திருமணத்தாறு, சரபங்கா ஆறு இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை காலை மராத்தான் போட்டி நடைபெற்றது.
இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில் ஒருவரான, மறைந்த திருச்செங்கோட்டைச் சேர்ந்த டி.எம்.காளியண்ணன் 103-ஆவது பிறந்த நாள் விழா, நாமக்கல் கொங்கு வேளாளர் சங்கத்தின் 50-ஆம் ஆண்டு தொடக்க விழா, நாமக்கல் மாராத்தான் ஓட்டம் ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு நடைபெற்ற மாராத்தான் ஓட்டத்தில் மூன்று பிரிவுகளில் குழந்தைகள், பெரியவர்கள், மாணவர்கள் என்ற அடிப்படையில் 1,500 பேர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
இதில், சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்கிறார். மேலும், அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இதையும் படிக்க: ‘தீ’யாக சதமடித்த சூர்யகுமார்: ஹைலைட்ஸ் விடியோ!
இதற்கான ஏற்பாடுகளை கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாசலம், டி.எம்.காளியண்ணன் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் வி.பி.செந்தில், பொருளாளர் அருள்செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.