மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024-ல் தான் தொடங்கும்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டுதான் தொடங்கும் என்று விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் வரைபடம்(கோப்புப்படம்)
மதுரை எய்ம்ஸ் வரைபடம்(கோப்புப்படம்)

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டுதான் தொடங்கும் என்று விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2018-ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து 2019 ஜனவரியில் எய்ம்ஸ் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் எய்ம்ஸ் ஆட்சிக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ரவீந்திரநாத், சந்திரசேகர் உள்ளிட்டோர் எய்ம்ஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு மாணிக்கம் தாகூர் டிவிட்டரில் பதிவிட்டதாவது:

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இலச்சினை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த இலச்சினையில் தமிழையும் சேர்க்க வேண்டுமென்று கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

வழக்கம்போல் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. கட்டுமானத்திற்கான நிதி ஆதாரங்களின் அனுமதி நிலுவையில் உள்ளதால் 2024-ல் தான் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எய்ம்ஸ் கட்டுவதற்கு 5 ஆண்டுகள் 8 மாதங்கள் தேவைப்படும் என்றும், 2026 அக்டோபர் மாதம் மருத்துவமனை திறக்கபடும் என்றும் மத்திய அரசு பதிலளித்திருந்தது.

இந்நிலையில், நிதி ஒதுக்கீட்டிற்கான ஆவணங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு மேலும் காலதாமதமாக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com