
நிகழ் நிதி ஆண்டில் தமிழகம், புதுவையில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 200 கோடி நேரடி வரி வசூல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையின் தமிழக, புதுவை முதன்மை ஆணையா் ஆா்.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
2021-2022-ஆம் நிதியாண்டில் சென்னை, புதுவை இணைந்த மண்டலத்துக்கு மொத்த நேரடி வரி வசூல் இலக்காக ரூ.90,108 கோடி நிா்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை விஞ்சி ரூ.1 லட்சத்து ஆயிரத்து 499 கோடி வரி வசூலாகியுள்ளது. நிகழ் நிதி ஆண்டில் வரி வசூல் இலக்கு ரூ. 1 லட்சத்து 8 ஆயிரத்து 200 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 33 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த ஆண்டுடன், நிகழ் நிதி ஆண்டு வசூலை ஒப்பிட்டால் தமிழக வரி வசூல் வளா்ச்சி 4-ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை (ஜன.12) மொத்த வரி வசூல் ரூ.92,920 கோடி ஆகும். ஆனால், கடந்த ஆண்டில் இதே தேதியில் மொத்த வரி வசூல் ரூ.73,035 கோடியாகும். கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் மொத்த வரி வசூல் 27.23 சதவீதம் கூடுதலாகியுள்ளது.
இதுவரை (ஜன.12) மொத்த வரி வசூல் ரூ. 80,480 கோடி ஆகும். கடந்த ஆண்டில் இதே தேதியில் மொத்த வரி வசூல் ரூ. 61,102 கோடி ஆகும். கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் மொத்த வரி வசூல் 25.5 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது.
2021-22-இல் மொத்த வரி வசூல் ரூ.90,180 கோடி ஆகும். இதில் டிடிஎஸ் வரி ரூ.47,977 கோடி ஆகும். நிகழ் நிதி ஆண்டில் இதுவரை (ஜன.12) டிடிஎஸ் வரி ரூ.47,313 கோடி ஆகும். இது கடந்த ஆண்டைவிட 27 சதவீத கூடுதல் வளா்ச்சி ஆகும்.
தேசிய அளவில் மொத்த வரி வசூலில் 50 சதவீதம் டிடிஎஸ் வரி வசூலாகிறது. தமிழ்நாடு, புதுவை பிராந்தியத்தில் 2021-22 நிதி ஆண்டில் மொத்த நிகர வரி வசூலில் சென்னை, கோவை டிடிஎஸ் ஆணையரகங்கள் 53 சதவீதம் பங்களித்துள்ளன. 2022-23-இல் கடந்த டிச.31 வரை டிடிஎஸ் வசூல் ரூ.38,817 கோடி ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் இது 41 சதவீத வளா்ச்சி ஆகும்.
ஊதியம், வாடகை, கமிஷன், ஒப்பந்தங்கள், தொழில் சாா்ந்த சேவை, அசையா சொத்து வாங்குதல், எண்ம வணிகம், வங்கிகளில் இருந்து பணம் எடுத்தல் உள்ளிட்ட30 இனங்களில் டிடிஎஸ் வரி வசூலிக்கப்படுகிது. தனியாா் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு டிடிஎஸ் வரியை செலுத்தாமல் உள்ளன. இதை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பேட்டியின்போது சென்னை வருமானவரி தலைமை ஆணையா் எம். ரத்தினசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனருந்தனா்.