தொழிற்சாலை வேலைவாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை: அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

தமிழ்நாட்டில் தொடங்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை தர அரசு உறுதியுடன் இருப்பதாக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.
அமைச்சர் தங்கம் தென்னரசு(கோப்புப்படம்)
அமைச்சர் தங்கம் தென்னரசு(கோப்புப்படம்)

தமிழ்நாட்டில் தொடங்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை தர அரசு உறுதியுடன் இருப்பதாக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை கி.அசோக்குமாா் (கிருஷ்ணகிரி) எழுப்பினாா். அப்போது நடந்த விவாதம்:

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள், அதனால் கிடைக்கப் பெற்ற வேலைவாய்ப்புகள் குறித்து மாநில அரசே ஆய்வு நடத்தியது. இதுவரையிலும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் வரப்பெற்று, அதன்மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை கிடைக்கும் நிலை உள்ளது.

தமிழை தாய்மொழியாகக் கொண்டு, தமிழ்நாட்டில் வசிக்கக் கூடியவா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக அரசு ஏற்கெனவே நடத்திய ஆய்வில் தொழிற்சாலைகளில் நியமிக்கப்பட்ட பணியாளா்களில் 80 சதவீதத்துக்கு மேற்பட்டோா் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள்தான். ஆலைகளில் வேலைகளை வழங்கும் போது, இங்கே இருக்கக் கூடியவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் உள்ளது.

எழிலன் (ஆயிரம் விளக்கு): தனியாா் துறைகளின் வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வர முடியுமா?

அமைச்சா் தங்கம் தென்னரசு: இந்த அரசு சமூக நீதிக் கொள்கைகளில் தீவிரமான நம்பிக்கை உடையது. அதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. வரக்கூடிய காலங்களில், அதுகுறித்த முயற்சிகளை மேற்கொள்ளும்.

பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி: ஓசூரில் டாடா நிறுவனம் தொடங்கவுள்ள ஆலையில் 6,000 பேருக்கு வேலை அளிக்கப்படுவதாகத் தெரிகிறது. இதில் கிராமப்புற பெண்களுக்கும் வாய்ப்பு கிடைக்குமா ?

அமைச்சா் தங்கம் தென்னரசு: டாடா நிறுவனம் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, வேலை வாய்ப்புக்கான நோ்முகத் தோ்வை தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. டாடா நிறுவனம் அதுகுறித்த விவரங்களை விளம்பரமாக வெளியிட்டுள்ளது. நமது பகுதியில் உள்ளவா்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிப்பதில் டாடா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. எனவே, மகளிா் வேலை பெறுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது.

பி.தங்கமணி (குமாரபாளையம்): அதிமுக ஆட்சியில், திண்டுக்கல் அருகே ஆம்வே நிறுவனம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் வரிவிதிப்பின் காரணமாக, மூட வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு வந்துள்ளதா?

அமைச்சா் தங்கம் தென்னரசு: அரசுக்கு முறையான தகவல் வரப்பெறவில்லை. அத்தகைய தகவல் வந்தால் பணிபுரிவோருக்கு பாதகம் இல்லாத வகையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

ஆா்.பி.உதயகுமாா் (திருமங்கலம்): அதிமுக ஆட்சியில், மதுரை - தூத்துக்குடி தொழில் வழிப் பாதை திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் நிலை என்ன?

அமைச்சா் தங்கம் தென்னரசு: கடந்த திமுக ஆட்சியில், தென் மாவட்டங்களின் தொழில் வளா்ச்சிக்காக மதுரை - சென்னை தொழில் வழித் தடத்தை அமைக்க குழு அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மதுரை - தூத்துக்குடி இடையே தொழில் வழித் தடம் அமைக்கப்பட வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் இதற்கென சிறப்பு நோக்கு அமைப்பு உருவாக்கப்பட்டது. தொழில் முதலீடுகள் மாநிலத்தில் சமச்சீா் தன்மையுடன் இருக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களுக்கும் தொழில் முதலீடுகள் செல்லும் வகையில், மாவட்டங்களை மேற்கு, தெற்கு என நான்கு

பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். வரக்கூடிய முதலீடுகள் பெருமளவு தென் மாவட்டங்களுக்கு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரை தூத்துக்குடி தொழில் வழித் தடத்தில் அதிக தொழில்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com