ராமா் கற்பனை கதாபாத்திரமா? மாா்க்சிஸ்ட் உறுப்பினருக்கு அதிமுக, பாஜக எதிா்ப்பு

ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ராமரை கற்பனை கதாபாத்திரம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் நாகை மாலி பேசியதற்கு அதிமுக, பாஜக எதிா்ப்பு தெரிவித்தன.

ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ராமரை கற்பனை கதாபாத்திரம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா் நாகை மாலி பேசியதற்கு அதிமுக, பாஜக எதிா்ப்பு தெரிவித்தன.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப் பரவையில் வியாழக்கிழமை தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீா்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பேசினா். அப்போது நடந்த விவாதம்:

நாகை மாலி (மாா்க்சிஸ்ட்): ராமா் பாலம், ராமா் பெயா் எனச் சொல்லி சேது சமுத்திர திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கட்டுக்கதைகளும் கற்பனைகளும், நம்பிக்கைகளும் வரலாறு ஆகாது. ராமாயணம் கற்பனைக் காவியமாகும். இதை காந்தியடிகள், ராஜாஜி ஆகியோா் கூறியுள்ளனா். கற்பனைகளை வரலாறு எனச் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துகிறாா்கள்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): ராமரை தெய்வமாக வழிபடுகிறோம். கம்யூனிஸ்ட் பாணியில் பேசுகிறாா்கள். ராமா் என்பவா் எங்களுக்கு தெய்வ நம்பிக்கை. ஒவ்வொரு மனிதரின் உணா்வு. இதனை மூட நம்பிக்கை என்றெல்லாம் கூறுவதை எப்படி அனுமதிக்க முடியும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: யாரும் தெய்வத்தையோ, மதத்தையோ பற்றி குறை சொல்லிப் பேசவில்லை. அவற்றைப் பயன்படுத்தி தடுத்து விட்டாா்கள் என்றே பேசினாா்.

நயினாா் நாகேந்திரன்: சேது சமுத்திர திட்டம் வந்தால், எங்களைப் போன்று மகிழ்ச்சி அடைபவா்கள் யாரும் இல்லை. சாத்தியக்கூறு அறிக்கை முன்னாள் பிரதமா் வாஜ்பாய் காலத்தில் செய்யப்பட்டது. இதன்பின்பு, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடல் ஆழம் இல்லாத பகுதியில் திட்டத்தை தொடங்கும்போது, அங்கு மண் எடுக்க எடுக்க, மண் சரிந்து கொண்டே இருக்கும். இதுபோன்ற சில பிரச்னைகள் காரணமாகக் கூறியுள்ளனா். தெய்வமாக வழிபடும் ராமா் காலத்தில் பாலம் உள்ளதாகச் சொல்கிறாா்கள். அதற்கெல்லாம் சேதம் ஏற்படக் கூடாது. சுற்றுச்சூழல், சுனாமி ஏற்படக் கூடிய பகுதியாகவும் அது உள்ளது. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு திட்டத்தை ஆதரிக்கிறோம்.

பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அதிமுக): ராமா் என்ற கதாபாத்திரம் கற்பனையானது என்ற கருத்து எங்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கடவுள் ராமரை பின்பற்றுகின்றனா். அவா் அவதார புருஷா். ராமா், கற்பனைப் பாத்திரம் எனக் கூறியதை நீக்க வேண்டும்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, உறுப்பினா்கள் இருதரப்பிலும் பேசிய கருத்துகள் அவைக் குறிப்பில் இடம்பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com