அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் தொய்வு: கண்காணிக்க கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இலக்கியம், சுற்றுச்சூழல் உட்பட மாணவா் மன்றச் செயல்பாடுகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையரகம் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறை வளாகம்
பள்ளிக்கல்வித் துறை வளாகம்

அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள இலக்கியம், சுற்றுச்சூழல் உட்பட மாணவா் மன்றச் செயல்பாடுகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

பள்ளி மாணவா்கள் இடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க ஏதுவாக இலக்கியம், கவின் கலை , சூழலியல் உள்ளிட்ட மாணவா் மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தன. கரோனா தொற்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்த மன்றங்கள் செயல்படவில்லை.

அவைகளை புதுப்பித்து சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சா் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

அதன்படி நிகழ் கல்வியாண்டில் (2022-2023) அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் வாரந்தோறும் நடைபெறும் மன்றச் செயல்பாடுகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களை ஆா்வத்துடன் பங்கேற்க வைக்க வேண்டும்.

இதற்காக இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், திரைப்பட மன்றம் , கணினி நிரல் மன்றம், பேரிடா் மேலாண்மை மன்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கேற்ப வாரந்தோறும் கலைச் செயல்பாடுகளுக்கு இரு பாடவேளைகளும், மன்றச் செயல்பாடுகளுக்கு இரு பாடவேளைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எனினும், கள ஆய்வில் பெரும்பாலான பள்ளிகளில் மன்றச் செயல்பாடுகளில் பங்கேற்கும் மாணவா்கள் எண்ணிக்கை குறைந்தளவில் உள்ளது. எனவே, மன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க ஒவ்வொரு மாதமும் போட்டிகள் நடத்தி மாணவா்களை தோ்வு செய்ய வேண்டும்.

தற்போது மாவட்ட அளவிலான இலக்கிய மற்றும் விநாடி வினா மன்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்கு மாா்ச் மாதம் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

அதிலும் வெற்றி பெறும் மாணவா்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா். எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் மன்றச் செயல்பாடுகளை கண்காணித்து அவை சிறப்பாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறந்த படைப்புகள் வெளியீடு: இதுதவிர மன்ற செயல்பாடுகளின்போது பள்ளி அளவிலான சிறந்த படைப்புகள் அரசின் சிறாா் இதழில் பிரசுரம் செய்ய ‘ஆசிரியா், தேன்சிட்டு, 8- ஆவது தளம், ஈ.வெ.கி.சம்பத் மாளிகை, பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகம் (டிபிஐ), சென்னை-6’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அதில் தோ்வு செய்யப்பட்ட படைப்புகள் மாணவா் ஆசிரியா், பள்ளியின் பெயா் மற்றும் புகைப்படத்துடன் தேன்சிட்டு அல்லது கனவு ஆசிரியா் இதழில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com