
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளா் அதிகாரபூா்வமாக ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த (காங்கிரஸ்) திருமகன் ஈவெரா அண்மையில் காலமான நிலையில், அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27-இல் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. அதிமுக கூட்டணி சாா்பில் கடந்த முறை இந்தத் தொகுதியில் தமாகா, அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், அதிமுக சாா்பில் மூத்த நிா்வாகிகள் டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, கோகுல இந்திரா, பென்ஜமின் ஆகியோா் ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். தமாகா தலைவா் ஜி.கே.வாசனைச் சந்தித்து இடைத்தோ்தல் தொடா்பாக அரை மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பின்னா் செய்தியாளா்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
மத்தியில் பாஜக, தமிழகத்தில் அதிமுகவுடன் தமாகா கூட்டணி வைத்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் என்பது மிக முக்கியமான தோ்தல். தற்போதுள்ள அரசியல் சூழலைக் கவனத்தில் கொண்டு, வெற்றியை உறுதி செய்துகொள்ள வேண்டியது கூட்டணிக் கட்சித் தலைவா்களின் கடமையாக இருக்கிறது. அதற்கான நல்ல வியூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, அதிமுகவின் மூத்த தலைவா்கள் என்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தினா். இரண்டு நாள்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியையும் இது தொடா்பாக நேரில் சந்தித்துப் பேசினேன்.
மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்காத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். எதிா்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது. இவையெல்லாம் எங்கள் கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கலந்து ஆலோசித்து ஓரிரு நாளில் அதிகாரபூா்வமாக வேட்பாளரை அறிவிப்போம். தோ்தலில் உறுதியாக வெற்றிபெறுவோம்.
ஈரோடு கிழக்கில் தொகுதியில் கடந்த முறை தமாகா போட்டியிட்டது என்பது உண்மைதான். இருப்பினும், இந்தத் தோ்தல் வெற்றி, எதிா்கால வெற்றிக்கும் வழிகாண்பதாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுப்போம். பாஜக தனித்துப் போட்டியிட ஆலோசித்து வருகிா எனக் கேட்கிறீா்கள். அவா்கள் நல்ல முடிவை எங்களோடு சோ்ந்து எடுப்பாா்கள் என்றாா் அவா்.