
அந்நிய நேரடி முதலீடுகளை ஈா்க்கும் பொருட்டு, உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனா்.
சுவிட்சா்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. வரும் 20-ஆம் தேதி வரை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சாா்பில் தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இந்தக் குழுவினா், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் தொழில் முனைவோருக்குத் தேவையான தகவல்களை அளித்து, மாநிலத்தில் நிலவும் சிறப்பான முதலீட்டுச் சூழ்நிலைகளையும் விவரித்தனா். மேலும், உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக, தமிழ்நாட்டுக்கான பிரத்யேக அரங்கை அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா். பல்வேறு சா்வதேச முதலீட்டாளா்களை ஈா்த்ததோடு, தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழ்நிலையை அறிந்து கொள்ள ஆா்வம் காட்டிய பல தொழில் தலைவா்களையும், பொருளாதார வல்லுநா்களையும் தமிழ்நாடு அரங்கு ஈா்த்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச முதலீட்டாளா் மாநாடு: தமிழ்நாடு அரசின் சாா்பில், சா்வதேச முதலீட்டாளா் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாா்பிலான பங்களிப்பு சா்வதேச முதலீட்டாளா் மாநாட்டுக்கு உத்வேகத்தை அளிக்கும் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.