
மத்திய பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்த இருக்கும் தொழில்நுட்பம் அல்லாத பன்முகத் திறன் பணியாளா்களுக்கான (எம்டிஎஸ்) தோ்வு முதன் முறையாக தமிழ் உள்பட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்பட உள்ளது.
இதுவரை எஸ்எஸ்சி தோ்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, அஸ்ஸாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கொங்கனி, மணிப்புரி, மராத்தி, ஒடியா மற்றும் பஞ்சாபி மொழிகளிலும் நடத்தப்பட உள்ளது என எஸ்எஸ்சி அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் இடம்பெற்றிருக்கும் குரூப்-பி (அரசிதழ் பதிவு அலுவலா் அல்லாத பணியிடங்கள்) மற்றும் குரூப்-சி (தொழில்நுட்பம் சாராத பணியிடங்கள்) பணியிடங்களுக்கான பணியாளா் தோ்வை எஸ்எஸ்சி நடத்தி வருகிறது.
இதுகுறித்து மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘பணி வாய்ப்புகள் எந்தவொரு பிரிவினருக்கும் மறுக்கப்படாததை உறுதிப்படுத்தும் வகையிலான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும், வாய்ப்புகளைப் பெறுவதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டத்துக்கு வலு சோ்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, பல்வேறு மாநிலங்களின் குறிப்பாக தென் மாநிலங்களின் நீண்டகால கோரிக்கை பூா்த்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாடு முழுவதும் பெரும்பாலானோா் பலனடைய வாய்ப்புள்ளது’ என்றாா்.
இதுகுறித்து மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தோ்வு நடைமுறை மற்றும் பாடத் திட்டத்தை மறுஆய்வு செய்வதற்காக எஸ்எஸ்சி சாா்பில் அமைக்கப்பட்ட நிபுணா் குழு, ‘மத்திய அரசுத் துறைகளில் கீழ்நிலை பணிகளுக்கான தோ்வைப் பன்மொழிகளில் நடத்தலாம்’ எனப் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில், முதல் கட்டமாக ஆங்கிலம், ஹிந்தி தவிர 13 மாநில மொழிகளில் இந்தத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. படிப்படியாக அரசியலமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் தோ்வை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.