அரசு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதாா் எண்ணுடன் சுயவிவரம் அளிக்க அறிவுறுத்தல்

அரசு உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் ஆதாா் எண்ணுடன் கூடிய சுய விவரத்தை சமா்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசு உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் ஆதாா் எண்ணுடன் கூடிய சுய விவரத்தை சமா்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்ட உதவிகளில், பராமரிப்பு உதவித் தொகையும் முக்கியமானது. மாநிலம் முழுவதும் உள்ள 2 லட்சத்து 11 ஆயிரத்து 391 பேருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக தலா ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.

75 சதவீதத்துக்கும் மேல் கடும் உடல் பாதிப்பு உள்ளவா்கள், மனவளா்ச்சி குன்றியவா்கள், முதுகு தண்டுவடம், பாா்கின்சன் நோய், தண்டுவட மரப்பு, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, தசைச் சிதைவு ஆகிய நோய்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வரும் நிலையில், 24, 951 போ் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கும் உதவித் தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் பயனை முழுமையாக தகுதியுள்ள பயனாளிகள் பெறும் வகையில், மாற்றுத்திறனாளிகள் தங்களது பெயருடன் ஆதாா் எண், முகவரி, குறைபாட்டின் தன்மை மற்றும் சதவீதம், தேசிய அடையாள அட்டை எண், வங்கிக் கணக்கு எண், தொலைபேசி எண் ஆகியவற்றை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா்களின் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த விவரங்களை விரைவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு தெரிவிக்கும்பட்சத்தில் உதவித் தொகை அனைவருக்கும் விரைவில் வழங்க ஏதுவாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com