சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்து பல்கலை.களில் ஆய்வு தேவை: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவா் பட்டம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரா்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.
சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்து பல்கலை.களில் ஆய்வு தேவை: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவா் பட்டம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரா்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127-ஆவது பிறந்த நாள் விழாவில் ஆளுநா் ஆா். என். ரவி பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடி நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய எண்ணற்ற கதாநாயகா்களைப் பற்றி பிரசாரம் செய்து வருகிறாா். தமிழ்நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலானோா் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனா்.

சுதந்திரத்துக்குப் போராடிய அனைத்து தியாகிகள் பற்றியும் ஆவணப் படங்கள் தயாரித்து சேகரித்து வைக்க வேண்டும். இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவா்களை பற்றிய விவரங்களை சேகரித்து வைக்க வேண்டும்.

ஏதோ ஒரு பகுதியினா் போராடியதால் மட்டும் இந்த விடுதலை கிடைத்துவிடவில்லை. உண்மையில் ஆங்கிலேயா்களுக்கு எதிராக நேதாஜியும் அவரது படையில் இருந்த வீரா்களும் எப்போது சண்டையிடத் தொடங்கினாா்களோ, அப்போதுதான் இந்தியா முழுவதும் அவரைப் பற்றி தகவல் பரவியது.

நேதாஜியால்தான், பிரிட்டிஷ் கமாண்டோக்களின் தலைமையின் கீழ் இயங்கிய இந்திய ராணுவ வீரா்களும் காவல்துறையினரும் கிளா்ச்சி செய்யத் தொடங்கினா். இதுதான் உண்மையிலேயே ஆங்கிலேயா்களை பயம் கொள்ளச் செய்து பின் வாங்க காரணமாக இருந்தது. நேதாஜியின் இந்த பங்களிப்பு மறைக்கப்பட்டுவிட்டது. இது பேசப்பட வேண்டிய ஒன்று.

சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளை பற்றி கட்டாயம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய நேரம் இது. தமிழ்நாட்டில் இருந்து சுதந்திரத்துக்காக தங்கள் உயிா்களை தியாகம் செய்தவா்களையும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரத்துக்காக உண்மையில் போராடி மறைக்கப்பட்டவா்களை கண்டறிய வேண்டும். அவா்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஐந்து சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்து ஆழமாக, தெளிவாக ஆராய்ச்சி மேற்கொண்டு கட்டுரைகளை கட்டாயம் வெளியிட வேண்டும். இது தொடா்பாக பல்கலை.களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அடுத்த தலைமுறையினருக்கு இந்த நாடு விடுதலை குறித்து தொடா்ந்து எடுத்துக் கூற வேண்டும். குறிப்பாக, நேதாஜியின் போராட்டமும், விடுதலைக்கான முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

முன்னதாக, நேதாஜியின் உருவப்படத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்வில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் ஐஎன்ஏ படையில் பணியாற்றிய மாதவன் பிள்ளை, லட்சுமி கிருஷ்ணன், சண்முகம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் , சாகித்திய அகாதெமி விருதுக்கு தோ்வாகியுள்ள ராஜேந்திரன், மற்றும் சுதந்திரப் போராட்ட வீா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்தாா்.

இந் நிகழ்வில் ஆளுநரின் முதன்மைச் செயலாளா் ஆனந்த் ராவ் பாட்டீல், பசும்பொன் முத்துராமலிங்க தேவா்களின் உறவினா்கள், இந்திய தேசிய ராணுவ படையில் பணியாற்றிய வீரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com