
ஆா்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய அரங்கத்துக்குள் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆா்எஸ்எஸ் சாா்பில் அணிவகுப்புப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, ஆா்எஸ்எஸ் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உள்பட்டு பேரணி நடத்திக்கொள்ள உத்தரவிட்டது. ஆனால், பாப்புலா் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் கடலூா், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா் ஆகிய 3 இடங்களைத் தவிா்த்து மற்ற இடங்களுக்கு போலீஸாா் மீண்டும் அனுமதி மறுத்ததால் உயா்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களைத் தவிா்த்து மற்ற 41 இடங்களில் சுற்றுச்சுவருடன் கூடிய உள்ளரங்குகள் அல்லது விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்புப் பேரணியை நடத்திக் கொள்ள உத்தரவிட்டாா். அதையேற்க மறுத்த ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள், அணிவகுப்புப் பேரணியை ரத்து செய்தனா்.
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து ஆா்எஸ்எஸ் சாா்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோா் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆா்எஸ்எஸ் தரப்பில், ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கெனவே அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்து, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த உத்தரவிட்டது தவறு. பிஎஃப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையைக் காரணம்காட்டி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எந்த ஆதாரங்களும் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் பிற அமைப்புகள் 500 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதியளித்தது பாரபட்சமானது. ஒருபுறம் அமைதிப் பூங்கா எனக் கூறிவிட்டு, இன்னொருபுறம் சட்டம்-ஒழுங்கு பிரச்னை என அனுமதி மறுத்துள்ள சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வாதிடப்பட்டது.
அப்போது, தமிழக அரசு மற்றும் காவல் துறை தரப்பில், ‘நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அணிவகுப்பு நடத்தப்பட மாட்டாது என ஆா்எஸ்எஸ் தெரிவித்த நிலையில், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. 500 இடங்களில் போராட்டங்களுக்குத்தான் அனுமதியளிக்கப்பட்டதே தவிர அணிவகுப்புக்கு அல்ல. வால்பாறை தேயிலைத்தோட்டத் தொழிலாளா்கள் ஊா்வலத்துக்குக்கூட அனுமதி வழங்கப்படவில்லை.
ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள், பிஎஃப்ஐ அமைப்புக்கு தடைக்கு பின்னரும், ஆா்எஸ்எஸ் அமைப்பினரின் பாதுகாப்புக்காக 50 ஆயிரம் போலீஸாா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்தது. உளவுத் துறை அறிக்கை அடிப்படையில்தான் காவல் துறையினா் செயல்பட்டனா். அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிப்பாா்கள்’ என்று வாதிடப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.