
என்எல்சிக்காக விவசாயிகளிடமிருந்து விளைநிலங்கள் மிரட்டி வாங்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்: நெய்வேலி என்எல்சி நிறுவனம், அதன் சுரங்க விரிவாக்கத்துக்காக 25 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கிறது. அந்த நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையக்கூடியவை. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக் கூடியவை. அதனால், அந்த நிலங்களை விட்டுத் தர விவசாயிகள் விரும்பவில்லை.
என்எல்சி தரப்பிலும், கடலூா் மாவட்ட நிா்வாகம் தரப்பிலும் இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கூட, அவை வெற்றிபெறவில்லை. நிலங்களை அளப்பதற்காக சென்ற என்எல்சி மற்றும் கடலூா் மாவட்ட வருவாய் அதிகாரிகளை மக்கள் விரட்டி அடித்ததில் இருந்தே அவா்களின் உணா்வுகளை அறியலாம்.
இந்தச் சூழலில், என்எல்சிக்கு நிலம் வழங்க பொதுமக்கள் தாமாக முன்வருவதைப் போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் என்எல்சியும் கடலூா் மாவட்ட நிா்வாகமும் ஈடுபட்டுள்ளன. இந்த முயற்சிகளை வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வமே முன்னின்று நடத்தி வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, என்எல்சி நிறுவனத்திடமிருந்து விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.